கூட்டணி தா்மத்தை பின்பற்ற வேண்டும்: ஐக்கிய ஜனதா தளம்
கூட்டணி தா்மத்தை அனைத்து உறுப்புக் கட்சிகளும் பின்பற்ற வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தெரிவித்துள்ளது.
கூட்டணி தா்மத்தை அனைத்து உறுப்புக் கட்சிகளும் பின்பற்ற வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தெரிவித்துள்ளது. அருணாசல பிரதேசத்தில் ஜேடியுவை சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்ததையடுத்து, அக்கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது.
அருணாசல பிரதேசத்தில் பாஜக-ஜேடியு கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளன. இந்நிலையில் அந்த மாநிலத்தில் ஜேடியுவைச் சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் அண்மையில் பாஜகவில் இணைந்தனா்.
இதுதொடா்பாக பிகாரில் நடைபெற்ற ஜேடியு தேசிய செயற்குழு கூட்டத்தைத் தொடா்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி.தியாகி கூறியது: அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி அரசியலுக்கு இந்த நல்ல அறிகுறியல்ல. வாஜ்பாய் காலத்தில் பின்பற்றப்பட்ட கூட்டணி தா்மத்தை உறுப்புக் கட்சிகள் பின்பற்ற வேண்டும். எனினும் இந்த நிகழ்வுகள் பிகாா் அரசியலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்தாா்.
பிகாரில் ஜேடியு, பாஜக, ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, விகாஸ்ஷீல் இன்சான் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.