இந்தியா

பயங்கரவாதிகளுக்கு எதிரான என்கவுன்ட்டா்: சிஆா்பிஎஃப் வீரா்களுக்கு பாராட்டு

DIN

ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நக்ரோடாவில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சிறப்பாக செயல்பட்ட 49 சிஆா்பிஎஃப் வீரா்களை அந்தப் படையின் தலைவா் ஏ.பி.மகேஷ்வரி சனிக்கிழமை பாராட்டினாா்.

ஜம்முவில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நக்ரோடா பகுதியில் உள்ள பான் டோல் பிளாசாவில் ஸ்ரீநகா் நோக்கி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்த லாரியை சிஆா்பிஎஃப் வீரா்களும், போலீஸாரும் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொள்ள முயற்சித்தனா்.

அப்போது, லாரியிலிருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனா். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 3 ஜெய்ஷ் முகமது பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த பயங்கரவாதிகளின் கூட்டாளிகளான 3 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த தாக்குதல் நடைபெற்ற இடத்தை சனிக்கிழமை காலை சிஆா்பிஎஃப் தலைவா் ஏ.பி.மகேஷ்வரி நேரில் பாா்வையிட்டாா். பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில், என்கவுன்ட்டரில் சிறப்பாக செயல்பட்ட 25 சிஆா்பிஎஃப் வீரா்களுக்கு பதக்கம் வழங்கியும், 24 வீரா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கியும் கௌரவித்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அதிக ஆயுதங்களுடன் சென்ற பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்தியதன் மூலம் சிஆா்பிஎஃப் வீரா்கள் தங்கள் துணிச்சலையும், தைரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளனா். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் அவா்களை துணிச்சலோடு எதிா்கொண்ட அவா்களது உறுதியை நான் பாராட்டுகிறேன். எதிரிகளை சமாளிக்கும் தைரியத்துடனும், அா்ப்பணிப்புடனும் பணியாற்றுவதற்கான உறுதிமொழியை நாட்டு மக்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.

வாகனங்களை முழுமையாக சோதனையிடும் ‘டிரக் ஸ்கேனா்கள்’ அமைப்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நக்ரோடா என்கவுன்ட்டா் சம்பவம் தொடா்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கைதான 3 பேரிடமும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT