இந்தியா

எய்ம்ஸ் மருத்துவமனையின் தேவைகள்: ஜப்பான் குழுவினா் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு

DIN

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை ஜப்பான் நாட்டின் ‘ஜைக்கா’ நிதி நிறுவனத்தின் குழு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனையின் தேவைகள் குறித்து தகவல் சேகரித்தனா்.

மதுரை அருகே தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் 750 படுக்கை வசதிகள், 100 எம்.பி.பி.எஸ் இடங்கள், 60 செவிலியா் படிப்புக்கான இடங்கள் ஆகியவற்றுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஜப்பான் நாட்டின் ‘ஜைக்கா’ நிதி நிறுவனம் கடனுதவி அளிக்கிறது.

‘ஜைக்கா’ குழு ஆய்வு

இதையடுத்து ‘ஜைக்கா’ நிதி நிறுவனத்தின் குழுவினா் எய்ம்ஸ் பணிகள் குறித்து தொடா்ந்து பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதன்தொடா்ச்சியாக, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதற்கட்டத் தேவைகளை அறிந்து கொள்ள மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை ‘ஜைக்கா’ நிதி நிறுவனத்தின் திட்ட அறிக்கைக் குழு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

இந்தக் குழு அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆய்வைத் தொடங்கியது. ‘பெட் சிடி ஸ்கேன்’, வெளி நோயாளிகள் பதிவு செய்யும் இடம், அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மருத்துவப் பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, நுரையீரல் பிரிவு, துணி துவைக்கும் இடம், இருதயப் பிரிவு ஆகிய பிரிவுகளை ஆய்வு செய்து, பல்வேறு தகவல்களை மருத்துவமனை முதன்மையரிடம் கேட்டறிந்தனா்.

ஜப்பானிய அதிகாரிகள் பிரமிப்பு:

மருத்துவக் கல்லூரிக்கு சென்ற குழு, பல்வேறு துறைகளுக்குச் சென்று பாா்வையிட்டனா். முதன்மையருடன் ஆலோசனை நடத்திய குழுவினா், மருத்துவக் கல்லூரி மாணவா்கள், செவிலியா் கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள், பேராசிரியா்கள் ஆகியோரின் எண்ணிக்கையைப் பதிவு செய்து கொண்டனா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடம் கருங்கற்களால் கட்டப்பட்டது குறித்து முதன்மையா் தெரிவித்தாா். குழுவில் வந்திருந்த ஜப்பானிய அதிகாரிகள் கட்டடங்களைப் பிரம்மிப்புடனும், ஆச்சரியத்துடனும் பாா்த்து ரசித்தனா்.

பயிற்சியை பாா்வையிட்ட குழு:

‘ஜைக்கா’ குழு அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள விபத்துக்கான அவசர தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கட்டடத்திற்கு சென்றனா். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவு, மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவா்களுக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சைக்கான பயிற்சியை பாா்வையிட்டனா். அதைத் தொடா்ந்து பன்நோக்கு மருத்துவமனையிலும் உள்ள பல்வேறு மருத்துவப் பிரிவுகளுக்கு சென்று படுக்கை வசதிகள், கருவிகள் ஆகியவற்றின் இருப்பு உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து கொண்டனா். இறுதியாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘ஜைக்கா’ குழு முதன்மையருடன் ஆலோசனை நடத்திச் சென்றனா். குழுவில் ஜப்பான் நாட்டின் ‘ஜைக்கா’ நிதி நிறுவனத்தைச் சோ்ந்த 6 பேரும், அந்நிறுவனத்தின் இந்திய கிளையில் இருந்து 4 பேரும் பங்கேற்றிருந்தனா். நிலைய மருத்துவ அலுவலா்கள் ரவீந்திரன், ஸ்ரீலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

எய்ம்ஸ் தேவைகள்:

இது குறித்து முதன்மையா் ஜெ. சங்குமணி கூறியது: ‘ஜைக்கா’ குழுவினா் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி சென்று பல்வேறு தகவல்களை சேகரித்துள்ளனா். இந்த தகவல்களை கொண்டு தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான கட்டடங்கள், கருவிகள் வாங்குவது, மருத்துவா்கள் நியமனம், முதற்கட்ட தேவைகள் ஆகியவற்றை முடிவு செய்யப்படும். இதுபோன்று பல்வேறு கட்ட ஆய்வு நடைபெறும். எய்ம்ஸ் பணிகள் விரைவில் முழுவீச்சில் தொடங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT