சபர்மதி ஆசிரம விருந்தினர் பதிவேட்டில் என்னவென்று கையெழுத்திட்டுள்ளார் தெரியுமா டிரம்ப்?
இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு வருகை தந்தார்.
ஆமதாபாத்: இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு வருகை தந்தார்.
1917ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி முதல் மகாத்மா காந்தியடிகளின் இந்த சபர்மதி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்தியா வரும் பல்வேறு உலகத் தலைவர்களும் இந்த ஆசிரமத்துக்குச் செல்வது வழக்கம்.
அந்த வகையில், சபர்மதி ஆசிரமத்துக்கு வருகை தந்த டொனால்ட் டிரம்ப்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
சபர்மதி ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கும் மகாத்மா காந்தியடிகளின் புகைப்படத்துக்கு இரு தலைவர்களும் மரியாதை செலுத்தினர். பின்னர், ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிறப்பான பல்வேறு பொருட்கள் மற்றும் விஷயங்கள் குறித்து டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி விளக்கினார்.
அப்போது, ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த நூல் நூற்கும் இராட்டையைப் பார்த்த டிரம்ப் தம்பதி அதனருகே அமர்ந்து, நூல் நூற்க முயன்றனர். அப்போது மெலனியா இராட்டையை சுழற்ற, அதற்கு ஏற்றவாறு பஞ்சுத் திரி நூலாக மாறுவதை டிரம்ப் வியப்போடு பார்த்தார். இதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். டிரம்ப் மற்றும் மெலனியா இருவரும் இராட்டை செயல்படும் விதம் குறித்து மிகுந்த ஆர்வத்தோடு கேட்டறிந்தனர்.
டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா, பிரதமர் மோடியுடன் சபர்மதி ஆசிரமத்தை சுற்றிப் பார்த்தனர்.
அப்போது, ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த மூன்று குரங்குகள் பொம்மையைக் காட்டி பிரதமர் நரேந்திர மோடி டிரம்ப் தம்பதிக்கு விளக்கினார்.
பிறகு, ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கும் வருகைப் பதிவேட்டில், ஆசிரமம் பற்றிய தங்களது கருத்துகளை பதிவிட்டு, தம்பதியர் கையெழுத்திட்டனர்.
அந்த பதிவேட்டில், எனது மிகச் சிறந்த நண்பர் நரேந்திர மோடிக்கு, இந்த சிறப்பான பயணத்தை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி என்று கூறி கையெழுத்திட்டுள்ளார் டொனால்ட் டிரம்ப்.
சபர்மதி ஆசிரம பயணத்தை முடித்துக் கொண்டு டொனால்ட் டிரம்ப் ஆமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள மொடேரா மைதானத்துக்குப் புறப்பட்டனர்.