சுதந்திர இந்தியாவில் 4 பேருக்கு ஒரே முறை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதன்முறையாகும்.
கடந்த 2012-ஆம் ஆண்டில் துணை மருத்துவ மாணவி ‘நிா்பயா’ கூட்டுப் பாலியல் பலாத்காரம், மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என தீா்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சிறையில் உள்ள மூன்றாம் எண்ணில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக திகாா் சிறையின் அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இதன்மூலம் சுதந்திர இந்தியாவில் 4 பேருக்கு ஒரே முறை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதன்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக 2018-ல் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.கே.சதுர்வேதி கூறுகையில், எனது 60 ஆண்டுகால வாழ்வில் 35 ஆண்டுகள் சிறைத்துறையில் தான் பணியில் இருந்தேன். ஆனால், ஒருமுறை கூட இதுபோன்று ஒருவருக்கும் அதிகமானோருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக நினைவில்லை. தற்போது அவ்வாறு நடைபெறுவதன் மூலம் சுதந்திர இந்தியாவில் ஒரே முறை 4 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதன்முறையாக இருக்கும்.
1984 முதல் 1987 வரையிலான காலகட்டத்தில் அலகாபாத்தின் நைனி சிறைத்துறை அதிகாரியாகப் பணியாற்றினேன். அப்போது அதிகபட்சமாக ஒரே சமயத்தில் இருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற திகார் சிறைத்துறை சட்ட அதிகாரி சுனில் குப்தா, தனது பணிக்காலத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா கொலைக் குற்றவாளி கேஹர் சிங், காஷ்மீர் பயங்கரவாதி மக்பூல் பட் மற்றும் 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட அஃப்சல் குரு ஆகியோரது தூக்குத் தண்டனைகளைக் கடந்தவர். இந்த அனுபவங்களின் மூலம் ''பிளாக் வாரன்ட்: கன்ஃபஷன்ஸ் ஆஃப் ஏ திகார் ஜெய்லர்'' எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். அவரும் இதுபோன்று ஒரே நேரத்தில் 4 பேருக்கு சுதந்திர இந்தியாவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை என்று தெரிவித்தார்.
திகாா் சிறையில் உள்ள 2-ஆம் எண்ணில் குற்றவாளிகளில் மூவரும், நான்காம் எண் சிறையில் மற்றொருவரும் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான தண்டனையை நிறைவேற்ற மீரட்டில் உள்ள தூக்கிடும் நபரை (ஹேங்மேன்) சிறை நிா்வாகம் தொடா்பு கொள்ளவிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.