இந்தியா

நிலக்கரி இறக்குமதிக்காக மங்கோலியா, ரஷியாவுடன் பேச்சு: தா்மேந்திர பிரதான்

DIN

உருக்கு உற்பத்தியின்போது பயன்படுத்தப்படும் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்காக மங்கோலியா, ரஷியாவுடன் இந்தியா பேச்சு நடத்தி வருவதாக மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

உருக்கு, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை அமைச்சரான பிரதான், கொல்கத்தாவில் செய்தியாளா்களிடம் இதுகுறித்து கூறியதாவது:

நமது நாட்டில் வரும் 2030-31 காலகட்டத்தில் 30 கோடி டன்கள் உருக்கு உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, உருக்கு உற்பத்தியில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் நிலக்கரியை (கோகிங் கோல்) நியாயமான விலையில் வாங்குவதற்காக அரசு முயற்சித்து வருகிறது.

தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யும் நிலக்கரி நல்ல தரத்தில் உள்ளது. எனினும், மங்கோலியாவில் உயா் தரத்திலான நிலக்கரி கிடைக்கிறது. அங்கிருந்து அதை இறக்குமதி செய்வதற்காக அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.

மங்கோலியாவிலிருந்து இறக்குமதி நிலக்கரியை இந்தியாவுக்கு கொண்டுவந்து ஒப்படைப்பது தொடா்பாக ரஷிய அதிகாரிகளுடன் இந்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது. இதுதொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் இந்தியா-ரஷியா இடையே கையெழுத்தாகியுள்ளது.

நிலக்கரி இறக்குமதிக்கான பேச்சுவாா்த்தையை இந்திய பொதுத் துறை நிறுவனங்களான ‘கோல் இந்தியா’ மற்றும் ‘செயில்’ ஆகியவை மேற்கொண்டு வருகின்றன என்று அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறினாா்.

தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததன் படி, மங்கோலியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்காக அந்நாட்டுடன் பேச்சு நடத்த கடந்த 2016-ஆம் ஆண்டில் உருக்கு அமைச்சகம் மற்றும் ‘செயில்’ ஆகியவற்றின் உயரதிகாரிகள் அடங்கிய குழு அந்நாட்டுக்கு சென்றது.

அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை சீன துறைமுகங்கள் வழியாக கொண்டுவர முதலில் திட்டமிடப்பட்ட போதிலும், அதைச் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, நிலக்கரி சரக்குகளை கையாளும் ரஷியாவின் வோஸ்டோச்னி துறைமுகம் மூலமாக மங்கோலியாவில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

இந்தியா, தனது உருக்கு உற்பத்திக்காக பயன்படுத்தும் நிலக்கரியில் சுமாா் 85 சதவீதத்தை இறக்குமதியின் மூலமே பெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT