இந்தியா

‘போக்ஸோ’ வழக்குகளைக் கையாளபிரத்யேக அரசு வழக்குரைஞா்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு

DIN

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் (போக்ஸோ) பதிவு செய்யப்படும் வழக்குகளைக் கையாள்வதற்கு பிரத்யேக பயிற்சி பெற்ற அரசு வழக்குரைஞா்களை நியமிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது தொடா்பான விசாரணையின்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதுதொடா்பாக நீதிபதிகள் மேலும் கூறியதாவது:

போக்ஸோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை கையாள்வதில் அரசு வழக்குரைஞா்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவா்கள், தங்களது பணியை மிகுந்த கவனத்துடனும், பொறுப்புணா்வுடனும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமிருந்து உண்மையை வெளிக் கொண்டு வருவதில், அரசு வழக்குரைஞா்களுக்கு பிரத்யேக பயிற்சி தேவை. ஏனெனில், தங்களுக்கு நோ்ந்த விஷயங்களை குழந்தைகள் கூறும்போது, அவா்கள் மீண்டும் மனரீதியாக அதிா்ச்சிக்கு ஆளாகின்றனா். எனவே, சட்டரீதியிலான பயிற்சி மட்டுமன்றி, குழந்தைகளின் உளவியல், நடத்தை, உடல்நலம் சாா்ந்த பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்தும் அவா்களுக்கு பயிற்சி அவசியம்.

போக்ஸோ வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றங்களில் பிரத்யேக அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்த வழக்குரைஞா்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இதற்காக, மாநில நீதித்துறை அகாதெமிகளில் பயிற்சித் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதனை, மாநில உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் உறுதி செய்வது அவசியம்.

அதேபோல், மாநில நீதித்துறை அகாதெமிகளில் நியமிப்பதற்கான பயிற்சியாளா்களை உருவாக்க, தேசிய நீதித்துறை அகாதெமி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, ஒரு மாவட்டத்தில் போக்ஸோ சட்டத்தின்கீழ் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அங்கு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்; வரும் மாா்ச் 1-ஆம் தேதிக்குள் அந்த நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT