முகப்பு
இந்தியா

மக்கள்தொகை கணக்கெடுப்பில் மிகக் கடினமான கேள்விகள் இடம்பெற வாய்ப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது வீட்டில் உள்ள கழிப்பறைகள், தொலைக்காட்சி, இணைய வசதி, வாகனங்கள், குடும்பத் தலைவரின் செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட 31 விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளதாக முந்தைய தகவல்கள் தெரிவித்தன.

Updated On : 16 ஜனவரி, 2020 at 2:43 PM
பகிர்:


 
மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது வீட்டில் உள்ள கழிப்பறைகள், தொலைக்காட்சி, இணைய வசதி, வாகனங்கள், குடும்பத் தலைவரின் செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட 31 விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளதாக முந்தைய தகவல்கள் தெரிவித்தன.

ஆனால் தற்போது, அதற்கான முன்னேற்பாடுகளில், பெற்றோரின் பிறந்த தேதி மற்றும் அவர்கள் பிறந்த இடம் போன்ற சில கடினமான கேள்விகளும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம், மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான முன்னேற்பாடு பணி தொடங்கிய போது, பான் எண் பற்றிய கேள்வி இருந்தது. ஆனால் தற்போது அந்த கேள்வி நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் தாய் மொழி என்ற கேள்வி இடம்பிடித்துள்ளது.

Advertisement

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் வீடுகள்தோறும் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் 31 கேள்விகளை கேட்குமாறு மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஏற்கனவே  உத்தரவிடப்பட்டிருந்தது. 

செல்லிடப்பேசி எண் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்புடைய தகவல்கள் பரிமாற்றத்துக்கு மட்டுமே கேட்கப்படவுள்ளன.

தொலைபேசி இணைப்பு, காா், இருசக்கர வாகனங்கள், மிதிவண்டி, செல்லிடப்பேசி, தொலைக்காட்சி, மடிக்கணினி அல்லது கணினி, இணைய வசதி, வீட்டு எண் உள்ளிட்ட விவரங்கள் ஒவ்வொரு வீட்டிலும் சேகரிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது, தந்தை மற்றும் தாயின் பிறந்த இடம், அவர்கள் கடைசியாக வாழ்ந்த இடம் உள்ளிட்டவையும் இணைக்கப்பட உள்ளன.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் பல நலத்திட்டப் பணிகளை மத்திய அரசு செயல்படுத்த ஏதுவாகவே இதுபோன்ற கேள்விகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் மாதம் வரை இதில் மாற்றங்கள் செய்யப்படும், கூடுதலாக சில கேள்விகள் கூட இணைக்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அதே சமயம், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, பொதுமக்கள் யாரும் எந்த ஆவணத்தையும் காண்பிக்க வேண்டியது இருக்காது, மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் ஊழியர்கள், பொதுமக்கள் சொல்லும் தகவல்களை பதிவு செய்து கொள்வார்கள் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.