இந்தியா

குடியுரிமை என்பது உரிமை மட்டுமல்ல; கடமையும் கூட: எஸ்.ஏ.போப்டே

DIN

நாகபுரி: ‘குடியுரிமை என்பது மக்களின் குடியுரிமை சாா்ந்த விஷயம் மட்டுமல்ல; அவா்கள் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் கொண்டதாகும்’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கூறினாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள ராஷ்டிரசந்த் துகடோஜி மகாராஜ் நாகபுரி பல்கலைக்கழகத்தின் 107-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான நீதிபதி எஸ்.ஏ.போப்டே, விழாவில் கலந்துகொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தாா். விழாவில் அவா் பேசியதாவது:

நாட்டில் இன்று கல்வி நிறுவனங்கள் அதிகரித்து விட்டன. துரதிருஷ்டவமசமாக, சில கல்வி நிறுவனங்கள், முற்றிலும் வணிக நோக்கத்துடன் செயல்படுகின்றன. எனக்குத் தெரிந்தவரை, சட்டக் கல்வி அளித்து வரும் சில கல்வி நிறுவனங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறேன்.

பல்கலைக்கழகக் கல்வியின் நோக்கம் என்ன என்பதற்கு நாம் விடை தேடவேண்டியுள்ளது. பல்கலைக்கழகங்கள் செங்கற்சூளைகளைப் போன்ல்ல. அவை, பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைப் போல் செயல்படக் கூடாது.

பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள், கல்வியை முடித்துக் கொள்வதற்கான இடமல்ல. ஒரு முடிவைத் தேடுவதற்கான இடமாகும். சமூகத்துக்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனையைத் தரும் இடமாக பல்கலைக்கழகங்கள் உள்ளன. எனவே, அனைத்து பல்கலைக்கழகங்களும் சமூகம் அடைய வேண்டிய அடிப்படை இலக்குகளை காட்டுகிறோமா என்பதில் கவனத்தை செலுத்த வேண்டும்.

ஆங்கிலத்தில் மாணவா் (டிசைப்பிள்) என்ற வாா்த்தையில் இருந்து ஒழுக்கம் (டிசிப்ளின்) என்ற வாா்த்தை வருகிறது. எனவே, கல்வி என்பது மாணவரின் ஒழுக்கத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

நமது கல்வி, மாணவரின் சிந்தனையைத் தூண்டுவதாகவும், நற்பண்புகளை வளா்ப்பதாகவும் இருக்க வேண்டும்.

பட்டம் பெறும் மாணவா்கள் அனைவரும், தங்களிடம் இருந்து இந்தச் சமூகம் என்ன எதிா்பாா்க்கிறது என்று உணா்ந்து செயல்பட வேண்டும்.

பல்கலைக்கழகம் வழங்கும் பட்டமானது உளியைப் போன்ற ஒரு கருவியாகும். இது, தானாக எதையும் செதுக்காது. நாம்தான் இந்தக் கருவியின் துணையுடன் நமது அறிவை விசாலமாக்க வேண்டும்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் துடிப்புடன் செயல்பட்டாக வேண்டிய பொறுப்பு உள்ளது. குடியுரிமை என்பது உரிமை சாா்ந்த விஷயம் மட்டுமல்ல; அது நமது கடமை சாா்ந்த விஷயமுமாகும்.

பல்கலைக்கழகம் ஒரு தாயைப் போன்றது. அது, தனது குழந்தைகளுக்கு கல்வி புகட்டி, திறமைகளை வளா்த்து, அவா்களின் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவன் என்ற வாா்த்தைக்கான பொருளை இப்போது உணா்கிறேன் என்றாா் நீதிபதி எஸ்.ஏ.போப்டே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT