கடைசி ஆசை என்ன? நிர்பயா குற்றவாளிகள் முன் வைக்கப்பட்டிருக்கும் கேள்வி
பிப்ரவரி 1ம் தேதி திகார் சிறையில் தூக்கிலிடப்பட உள்ள நிர்பயா குற்றவாளிகள் 4 பேரிடமும், அவர்களது கடைசி ஆசை என்னவென்று சிறை நிர்வாகம் கேட்டுள்ளது.
புது தில்லி: பிப்ரவரி 1ம் தேதி திகார் சிறையில் தூக்கிலிடப்பட உள்ள நிர்பயா குற்றவாளிகள் 4 பேரிடமும், அவர்களது கடைசி ஆசை என்னவென்று சிறை நிர்வாகம் கேட்டுள்ளது.
நிர்பயா குற்றவாளிகளை பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என்று தில்லி நீதிமன்றம் கடந்த வாரம் வாரண்ட் பிறப்பித்திருந்த நிலையில், குற்றவாளிகளின் கடைசி ஆசையை சிறை நிர்வாகம் கேட்டுள்ளது.
சட்டவிதிகளின்படி, தூக்கிலிடப்படும் குற்றவாளிகள் கடைசி ஆசையாக, தங்களது உறவினர்கள் யாரையாவது சந்திக்க விரும்பலாம், அல்லது தனது சொத்துக்களை யாருக்காவது ஒப்படைக்க விரும்பலாம்.
ஆனால், தூக்குத் தண்டனை பிறப்பிக்கப்பட்டிருக்கும் முகேஷ் சிங், வினய் ஷர்மா, அக்சய் சிங், பவன் குப்தா ஆகிய நான்கு பேருமே தற்போது வரை தங்களது கடைசி ஆசையை சிறை நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை. மௌனம் காத்து வருகிறார்கள்.
காரணம், இவர்கள் இன்னமும், தாங்கள் தூக்குத் தண்டனையில் இருந்து காப்பாற்றப்படலாம் என்ற நம்பிக்கையோடு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, ஜனவரி 22ம் தேதி நால்வரையும் தூக்கிலிட தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி 1ம் தேதிக்கு இது மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.