கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக நிர்பயா குற்றவாளி வழக்கு: உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு
‘நிர்பயா’ வழக்கில் குடியரசுத் தலைவரின் கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை (புதன்கிழமை) தீர்ப்பு வழங்குகிறது.
புது தில்லி: ‘நிர்பயா’ வழக்கில் குடியரசுத் தலைவரின் கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை (புதன்கிழமை) தீர்ப்பு வழங்குகிறது.
‘நிர்பயா’ வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தள்ளுபடி செய்தார். இதையடுத்து, அதை நீதித் துறை மறு ஆய்வு செய்யக் கோரி குற்றவாளிகளுள் ஒருவரான முகேஷ் குமார் சிங் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன், ‘நிர்பயா’ வழக்கு குற்றவாளி முகேஷ் குமார் சிங்கின் வழக்குரைஞர் திங்கள்கிழமை ஆஜராகி இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். அப்போது, "யாராவது தூக்கிலிடப் போவதாக இருந்தால், அதைவிட ஒரு மிக அவசரம் ஏதுவும் இருக்க முடியாது. தூக்குத் தண்டனை நிறைவேற்றம் தொடர்பான மனுவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதனால், மனுதாரரின் வழக்குரைஞர் முறையீட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அவர் இந்த விஷயம் குறித்து உச்சநீதிமன்றத்தின் உரிய அதிகாரியை அணுகித் தெரிவிக்கலாம்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த மனுவை வழக்குகளைப் பட்டியலிடும் அதிகாரி பரிசீலித்தார். அதன் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவை செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு விசாரிப்பதற்கு பட்டியலிடுமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த மனு இன்று விசாரிக்கப்பட்டது. இதன் முடிவில் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது.