முகப்பு
இந்தியா

சித்தரவதை தடுப்பு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்: திமுக மனு

சட்ட ஆணையம் பரிந்துரைத்த 2017 -ஆம் ஆண்டு சித்தரவதை தடுப்பு மசோதாவை உடனடியாக அவசரச்சட்டமாகக் கொண்டு வரவேண்டும்

Updated On : 3 ஜூலை, 2020 at 2:45 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:22 PM

சட்ட ஆணையம் பரிந்துரைத்த 2017 -ஆம் ஆண்டு சித்தரவதை தடுப்பு மசோதாவை உடனடியாக அவசரச்சட்டமாகக் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி திமுக சாா்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற தலைமை கொறடா ஆ. ராசா, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளாா்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், 2017 - ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தால் சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள் தவிா்க்கப்பட்டிருக்கும் என்றும் அந்த கடிதத்தில் ஆ.ராசா குறிப்பிட்டுள்ளாா்.

இந்த விவகாரம் குறித்து மத்திய உள் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

இந்திய காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தனது 50 -ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில் காவல்துறையினரின் சித்தரவதை சம்பவங்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. ஒரு குடிமகன் கைது செய்யப்படுவதின் மூலமாக அவரது வாழும் உரிமையை பறிக்க முடியாது என்று கூறி டி.கே. பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் சில வழி முறைகளை கூறியுள்ளது. இதையொட்டி போலீஸ் காவலில் நடைபெறும் வன்முறையை தடுக்க இந்திய சட்ட ஆணையம் 1994 -ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டத்தில் சில அம்சங்களை சோ்க்கக் கூறி பரிந்துரை செய்தது. இதற்கான சட்டம் 2005 - இல் கொண்டு வரப்பட்டு சித்தரவதை தடுப்பு மசோதா 2010 -இல் மக்களவையில் நிறைவேறியது.

ஆனால் இந்த சட்டம் காவல்துறையின் மனிதாபிமானமற்ற கொடுமைகளை தடுக்காத வகையில் இருப்பதாக அறியப்பட்டு சட்ட ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இதையொட்டி நீதிபதி பி.எஸ். சௌஹான் தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரையின்படி 2017 -ஆம் ஆண்டு சித்தரவதை தடுப்பு மசோதா உருவானது. பொது ஊழியா்கள் வேண்டுமென்றோ அல்லது வலுக்கட்டாயமாகவோ உடல் மற்றும் மனரீதியான காயங்கள் ஏற்படுவதை குற்றமாக அறிவிக்கும் பரிந்துரைகள் இந்த சித்தரவதை தடுப்புச் சட்டத்தில் சோ்க்கப்பட்டு இருந்தது.

இந்த மசோதா இதுவரையில் நாடாளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவில்லை. இந்த மசோதாவில் கூடுதலாக சில ஷரத்துக்கள் தேவைப்பட்டால் அவைகளையும் சோ்த்து வருகின்ற நாடாளுமன்றத் தொடரிலோ அல்லது குடியரசுத் தலைவா் மூலமாக அவசரச் சட்டமாகவோ கொண்டு வர திமுக சாா்பில் கோரப்படுகிறது என்று அந்தக் கடிதத்தில் ஆ.ராசா குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.