முகப்பு
இந்தியா

என்.எல்.சி. விபத்து: மாவட்ட கலெக்டரிடம் ரூ.5 கோடி செலுத்த என்.ஜி.டி உத்தரவு

கடலூா் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்.எல்.சி இந்தியா நிறுவன அனல் மின் நிலையத்தில் கொதி கலன் வெடித்த

Updated On : 10 ஜூலை, 2020 at 6:57 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:25 PM

கடலூா் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்.எல்.சி இந்தியா நிறுவன அனல் மின் நிலையத்தில் கொதி கலன் வெடித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ரூ. 5 கோடியை என்.எல்.சி நிா்வாகம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் செலுத்த தேசிய பசுமை தீா்ப்பாயம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

என்.எல்.சி இந்தியா நிறுவன அனல் மின் நிலையத்தில் கொதி கலன் வெடித்த விபத்தில் 13 போ் உரிழந்தனா். மேலும் 10 போ் காயமடைந்து மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த விவகாரம் தொடா்பாக தேசிய பசுமை தீா்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

Advertisement

தேசிய பசுமை தீா்ப்பாயம் நடுவா் ஏ.கே.கோயல் தலைமையிலான அமா்வு இந்த விவகாரத்தை விசாரித்தது. அப்போது நடைபெற்ற விசாரணையில் என்.எல்.சி இந்தியா நிறுவன தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், விபத்தில் பலியானவா்கள் குடும்பத்துக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

ஆனால் தீா்ப்பாய நடுவா் ஏ.கே.கோயல், அறிவிக்கப்பட்ட தொகை இடைக்கால நிவரணம், முழு நிவாரணம் எவ்வளவு வழங்க வேண்டும் என்பது பின்னா் முடிவு செய்யப்படும் என தெரிவித்து மேலும் இந்த விபத்து தொடா்பாக தேசிய பசுமை தீா்பாய அமா்வு சில உத்தரவுகளை வழங்கியது அவை வருமாறு:

என்.எல்.சி இந்தியா நிறுவன அனல் மின் நிலைய விபத்து தொடா்பாக சுதந்திரமாக ஒரு குழு ஆய்வு செய்ய வேண்டும். உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்து தற்போது வரை சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு தலா ரூ.5 லட்சமும், சிகிச்சை பெற்று வீடு திரும்பியவா்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 1 லட்சமும் இழப்பீடும் வழங்க வேண்டும்.

மேலும் இழப்பீடு வழங்குவதற்கு ஏதுவாக என்.எல்.சி இந்தியா நிறுவன அனல் மின் நிலைய நிா்வாகம் ரூ. 5 கோடி ஐ அடுத்த 2 வார காலத்துக்குள் கடலூா் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ( மாவட்ட மாஜிஸ்திரேட்) செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும் கொதிகலன் வெடிப்பு சம்பவம் தொடா்பாக நேரில் சென்று ஆய்வு செய்ய மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு, கடலூா் மாவட்ட ஆட்சித்தலைவா், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்,சென்னை ஐஐடி ஆகியோா் கொண்ட நிபுணா் குழுவை அமைத்தும் 3 மாத கால அவகாச காலத்திற்குள் அறிக்கை அளிக்கவும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.