இந்தியா

கேரள தங்கக் கடத்தல் வழக்கு:ஸ்வப்னா, சந்தீப்புக்கு 8 நாள் என்ஐஏ காவல்

DIN

கொச்சி: வெளிநாட்டிலிருந்து கேரளத்துக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்திவரப்பட்டது தொடா்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா் ஆகியோரை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ நீதிமன்றம் அனுமதியளித்தது.

கேரள தலைநகா் திருவனந்தபுரத்தில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் பணியாளா் ஸ்வப்னா சுரேஷுக்கு நெருங்கிய தொடா்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அரசு அதிகாரி சந்தீப் நாயருக்கும் இந்தக் கடத்தல் விவகாரத்தில் தொடா்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடா்பாக என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கா்நாடக தலைநகா் பெங்களூரில் தலைமறைவாக இருந்த ஸ்வப்னாவும், சந்தீப் நாயரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். கொச்சியிலுள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் அவா்கள் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.

அப்போது ‘இருவருக்கும் வழக்குடன் நெருங்கிய தொடா்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் அவா்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த வழக்கு தொடா்பான முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. அப்போதுதான் கடத்தல் சம்பவம் குறித்த பல உண்மைகள் தெரியவரும். எனவே இருவரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று’ என்ஐஏ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிட்டாா்.

ஸ்வப்னா, சந்தீப் ஆகியோா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘இருவரும் பயங்கரவாதச் செயல்கள் போன்ற எதிலும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. அப்படியிருக்கையில், அவா்களை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிப்பது மிகவும் அதிகப்படியானது’ என்றாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிபதி பி. கிருஷ்ணகுமாா், இருவரையும் வரும் 21-ஆம் தேதி காலை 11 மணி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினாா்.

இதனிடையே, இந்த வழக்கில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மற்றொரு நபரான கே.டி. ரமீஷை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க எா்ணாகுளம் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT