ஜூன் மாதத்தை விட தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது: கேஜரிவால்
ஜூன் மாதத்தைக் காட்டிலும் தற்போது தலைநகர் தில்லியில் நிலைமை சீரடைந்துள்ளது, ஆனால், கரோனாவுக்கு எதிரான போரில் இன்னமும் வெற்றி பெறவில்லை என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.
புது தில்லி: ஜூன் மாதத்தைக் காட்டிலும் தற்போது தலைநகர் தில்லியில் நிலைமை சீரடைந்துள்ளது, ஆனால், கரோனாவுக்கு எதிரான போரில் இன்னமும் வெற்றி பெறவில்லை என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.
காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லியில் தற்போது கரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது, ஆனால், அதைக் கொண்டு நாம் மனநிறைவு அடைந்து விட முடியாது, தொடர்ந்து கரோனாவை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கரோனாவை வெல்வதில் தில்லி அரசின் முதல் கொள்கையே, கரோனாவை வெல்லும் போரில் தில்லி அரசு மட்டும் தனியாக வென்றுவிட முடியாது, அனைத்துத் தரப்பின் ஒத்துழைப்பும் அவசியம், மத்திய அரசு, விடுதிகள், நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பு ஒத்துழைப்பும் மிக அவசியம்.
ஜூன் மாதத்தோடு ஒப்பிட்டால், தற்போது தில்லியில் நிலைமை சீராக உள்ளது. தில்லியில் தற்போது 18,600 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். அதிலும் வெறும் 4000 படுக்கை வசதிகள் மட்டுமே கரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.