இந்தியா

ஆளுநரின் தடையை மீறி புதுவை பேரவையில் பட்ஜெட் தாக்கல்

புதுவை துணைநிலை ஆளுநரின் தடையை மீறி, சட்டப்பேரவையில் நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் வே.நாராயணசாமி திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

DIN


புதுச்சேரி: புதுவை துணைநிலை ஆளுநரின் தடையை மீறி, சட்டப்பேரவையில் நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் வே.நாராயணசாமி திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

புதுவையில் இடைக்கால பட்ஜெட்டுக்கான அனுமதிக் காலம் ஜூன் 30-இல் நிறைவடைந்த நிலையில், காலதாமதத்துக்கு பிறகு முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து,  பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கள்கிழமை முதல் நடைபெறும் என்று சட்டப்பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதனிடையே, பேரவையில் துணைநிலை ஆளுநர் உரையாற்றுவதில் சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறி, ஞாயிற்றுக்கிழமை இரவு முதல்வர் நாராயணசாமி தலைமையில், அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை ஆளுநர் கிரண் பேடிக்கு தான் எழுதிய கடிதத்தை முதல்வர் நாராயணசாமி வெளியிட்டார். இதையடுத்து, சிறிது நேரத்தில் முதல்வர் நாராயணசாமிக்கு தான் எழுதிய கடிதத்தை ஆளுநர் கிரண் பேடி வெளியிட்டார்.

ஆளுநர் வெளியிட்ட கடிதம்: ஆளுநர் உரையைக் காலதாமதமாக அனுப்பியுள்ளீர்கள். பட்ஜெட்டில் மானியக் கோரிக்கை தொடர்பான முழு விவரமும் அனுப்பிவைக்கப்படவில்லை. யூனியன் பிரதேச சட்டத்தின்படி, ஆளுநரின் ஒப்புதலின்றி சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்யக் கூடாது. ஒப்புதல் பெற்ற பிறகு, வேறொரு நாளில் சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, சட்டப்பேரவைக் கூட்டம் காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. அவை நடவடிக்கைகளை பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து தொடக்கிவைத்து, ஆளுநர் வராத நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஆளுநர் உரையை அவர் ஒத்திவைத்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக நியமன உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு அவையை ஒத்திவைப்பதாகவும், பகல் 12 மணிக்கு முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்தார். அதன்படி, பகல் 12 மணிக்கு முதல்வர் நாராயணசாமி ரூ. 9 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: தற்போது மத்திய அரசு ரூ. 1,700 கோடியை புதுவை பட்ஜெட்டுக்கு ஒதுக்கியுள்ளது. மத்திய நிதிக் குழுவில் புதுவையைச் சேர்த்தால் மேலும் ரூ. 2,800 கோடி புதுவைக்கு கிடைக்கும். ஜிஎஸ்டியை வசூலிக்கும் உரிமையை புதுவை இழந்துவிட்டது. உற்பத்தி மாநிலமாக இருப்பதால், ஜிஎஸ்டியால் புதுவைக்கு பாதிப்புகள் அதிகம்.

தற்போது தாக்கல் செய்யப்பட்ட ரூ. 9 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டில்,  மாநில நிதி ஆதாரங்கள் ரூ. 5,267 கோடியாகவும் (59 சதவீதம்), மத்திய நிதி உதவித் திட்டங்களின் கீழ் வழங்கும் நிதியையும் சேர்த்து மத்திய அரசு நிதி உதவி ரூ. 2,023 கோடியாகவும் (22 சதவீதம்) உள்ளது. மீதமுள்ள ரூ. 1,710 கோடி (19 சதவீதம்) வெளிச்சந்தை கடன் மற்றும் மத்திய நிதி நிறுவனங்கள் மூலம் பெறப்படும்.

மேலும், பட்ஜெட் தொகையில் ரூ. 1,966 கோடி ஊதியத்துக்கும், ரூ.1,177 கோடி ஓய்வூதியத்துக்கும், கடனுக்கான வட்டிக்காக ரூ. 1,625 கோடியும்,  மின்சாரத்துக்கு ரூ. 1,525 கோடியும் ஒதுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரசின் பிற செலவினங்களுக்காக ரூ. 896 கோடியும், தன்னாட்சி, பொதுத் துறை, கூட்டுறவு, உயர் கல்வி நிறுவனங்களுக்காக ரூ. 864 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் நாராயணசாமி.

கூட்டம் தொடங்கியதும் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர்  என்.ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவைக்குள் வந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

SCROLL FOR NEXT