இந்தியா

நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருள்கள் : பிரதமர் மோடி

ANI

புது தில்லி: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக வரும் நவம்பர்  மாதம் வரை இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பிரதமா் நரேந்திர மோடி புது தில்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஏழை, எளிய மக்களின் நலன் கருதி வரும் நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும்.

ரேஷனில் ஏழை, எளிய மக்களுக்கு கோதுமை அல்லது அரிசி 5 கிலோ அளவில் இலவசமாக வழங்கப்படும். அதனுடன் ஒரு கிலோ கடலை பருப்பும் வழங்கப்படும். ஒரு இந்தியர் கூட பசியோடு உறங்கச் செல்லக் கூடாது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் சுமார்  80 கோடி மக்களை நமது இலவச ரேஷன் பொருள்கள் சென்றடையும். இந்த திட்டத்துக்காக மத்திய அரசுக்கு ரூ.90 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.

கடந்த 3 மாதத்தில் பொதுமக்களுக்கு ரூ.31 ஆயிரம் கோடி நேரடி பண உதவியாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 18 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

முகக் கவசம் அணியாமல் இருந்ததால் ஒரு நாட்டின் பிரதமருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பிரதமர் முதல் சாமானியர்கள் வரை விதிமுறைகள் ஒன்றுதான் என்றும் மோடி கூறியுள்ளார்.
 

மேலும் அவர் பேசுகையில், சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக கரோனா பரவலும் கட்டுப்படுத்தப்பட்டது. பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாகப் பின்பற்றவில்லை. சிலர் அலட்சியமாக செயல்படுவது கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

ஊரடங்கு தளர்வுகள் 2.0 வந்தாலும் மக்கள் கவனமாக இருக்கு வேண்டும். மழைக்காலம் தொடங்க உள்ளதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த காலத்தில் காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

சிறிய அளவிலான அலட்சியம் கூட உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

அரசு அதிகாரிகள், மக்கள் தற்போது மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். பிற உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது நாட்டில் நிலைமை சீராகவே உள்ளது என்று கூறினார்.

ஜூலை 1 முதல் நாட்டில் 2-ஆம் கட்ட பொதுமுடக்க விடுப்பு (அன்லாக்-2) அமலாகும் சூழலிலும் பிரதமா் மோடி உரையாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கரோனா நோய்த்தொற்று சூழல் ஏற்பட்டதையடுத்து நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி உரையாற்ற இருப்பது இது 6-ஆவது முறையாகும்.

முதலில் கடந்த மாா்ச் 19-ஆம் தேதி உரையாற்றியபோது மாா்ச் 22-ஆம் தேதி ஒருநாள் பொது முடக்கத்தை அறிவித்தாா்.

பின்னா் மாா்ச் 24-ஆம் தேதி உரையாற்றியபோது கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க நாட்டில் 21 நாள் பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்தாா். ஏப்ரல் 3-ஆம் தேதி நாட்டு மக்களுக்கு வெளியிட்ட காணொலிச் செய்தியில், கரோனா முன்களப் பணியாளா்களை கௌரவிக்கும் வகையில் ஏப்ரல் 5-ஆம் தேதி வீடுகளில் விளக்கேற்றக் கூறியிருந்தாா்.

பின்னா் ஏப்ரல் 14-ஆம் தேதி ஆற்றிய உரையின்போது பொது முடக்கம் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தாா். இறுதியாக கடந்த மே 12-ஆம் தேதி மக்களுக்கு உரையாற்றியபோது நாட்டின் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுப்பதற்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு நிதி தொகுப்பை அறிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT