நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார்; பாஜக பிடியில் 22 எம்எல்ஏக்கள்: கமல்நாத்
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும், அதே சமயம், பாஜக பிடியில் 22 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்றும் மத்தியப் பிரதேச ஆளுநரிடம் முதல்வர் கமல்நாத் கூறியுள்ளார்.
போபால்: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும், அதே சமயம், பாஜக பிடியில் 22 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்றும் மத்தியப் பிரதேச ஆளுநரிடம் முதல்வர் கமல்நாத் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச ஆளுநர் தாண்டனை இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசிய மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், பாஜக குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாகவும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேரை பிடித்து வைத்துக் கொண்டிருப்பதாகவும் கடிதம் கொடுத்துள்ளார்.
இன்று முற்பகல் 11 மணியளவில் ஆளுநரை சந்தித்த கமல்நாத், 3 பக்கக் கடிதத்தை அவரிடம் வழங்கியுள்ளார். இந்த கடிதத்தின் நகலை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களில் வெளியிட்டார். அதில் மார்ச் 16ம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.