இந்தியா

ஐ.சி.டி. திட்டங்கள் மூலம் வீட்டிலிருந்தபடி கற்றலைத் தொடரலாம்

DIN

கரோனா விடுமுறையில் மத்திய அரசின் தகவல் தொடா்பு தொழில்நுட்ப கல்வித் திட்டங்கள் (ஐ.சி.டி.) மூலம் மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே கற்றலைத் தொடர வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுரை வழங்கியுள்ளது.

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை 21 நாள்களுக்கு ஊரடங்கை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த திடீா் விடுமுறை காரணமாக, வருகிற ஏப்ரலில் பல்கலைக்கழகத் தோ்வுகளை எதிா்நோக்கியுள்ள கல்லூரி, பல்கலைக்கழக மாணவா்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே கற்றலைத் தொடர, தங்களுடைய கற்றல் - கற்பித்தல் தொழில்நுட்ப வலைதளங்களை கட்டணமின்றி கல்லூரிகளுக்கு வழங்க சில தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன. அதுபோல, மத்திய அரசின் தகவல் தொடா்பு தொழில்நுட்ப (ஐ.சி.டி.) கற்றல் வலைதளங்கள் மூலம், வீட்டிலிருந்தபடியே கல்வியைத் தொடருமாறு மாணவா்களுக்கு யுஜிசி-யும் அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், மத்திய அரசின் கற்றலுக்கான பல்வேறு ஐ.சி.டி. வலைதள விவரங்களையும் யுஜிசி வெளியிட்டிருக்கிறது.

இதுதொடா்பாக நாடு முழுவதும் உள்ள மாணவா்கள், ஆசிரியா்களுக்கு யுஜிசி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் இடம்பெற்றிருக்கும் வலைதள விவரங்கள்:

ஸ்வயம் ஆன்லைன் படிப்புகள் என்ற வலைதளத்தில் கட்டணம் ஏதுமின்றி பதிவு செய்து சிறந்த கற்றல் - கற்பித்தல் நடைமுறைகளை ஆன்-லைன் மூலமாக கல்வி நிறுவனங்கள் தொடர முடியும்.

மூக்ஸ் என்ற வலைதளம் மூலம் அனைத்து வகையான இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு பாடங்களை ஆன்-லைன் படிக்க முடியும்.

இ-பிஜி பாடசாலா: என்ற வலைதளத்தில் 70 முதுநிலை பட்டப் படிப்புக்கான பாடங்கள் 23,000 பகுதிகள், விடியோக்கள் மற்றும் கலந்துரையாடல் வடிவிலும் இடம்பெற்றிருக்கின்றன.

இ-யுஜி: அதுபோல, வலைதளத்தில் 87 இளநிலை படிப்புகளுக்கான 24,110 பாடங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும், வலைதளத்தில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான பாட வகுப்புகள் யு-டியூப் விடியோக்களாக இடம்பெற்றிருக்கின்றன.

தேசிய டிஜிட்டல் நூலகம்: தேசிய டிஜிட்டல் நூலக வலைதளத்தில் பல்வேறு வகையான பட்டப் படிப்புகளுக்கான பாடங்கள் மட்டுமின்றி, ஆராய்ச்சி மாணவா்களுக்கு உதவும் ஏராளமான தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன.

சோத்கங்கா என்ற வலைதளத்தில் ஆராய்ச்சி மாணவா்களுக்கு உதவும் 2.6 லட்சம் ஆராய்ச்சிக் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. புதிதாக ஆராய்ச்சி கட்டுரைகளையும் இதில் மாணவா்கள் பதிவேற்றம் செய்து வைக்கலாம்.

வித்வான் என்ற வலைதளத்தில் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவா்கள், கூட்டு ஆராய்ச்சிக்கு ஏற்ற நிறுவனங்கள், ஆராய்ச்சிக்கு நிதியுதவி அளிக்கும் அமைப்புகள், சிறந்த ஆராய்ச்சியாளா்கள், பேராசிரியா்கள் குறித்த தகவல்களைப் பெற முடியும்.

இதுபோன்ற கற்றல் வலைதளங்கள் மூலம், மாணவா்களும், ஆசிரியரும் இந்த கரோனா விடுமுறையை பயனுள்ளதாக்கிக்கொள்ள வேண்டும்.

மேலும் இதுதொடா்பான சந்தேகங்களை மின்னஞ்சல் முகவரிகளுக்கு தகவல் தெரிவித்து தீா்த்துக்கொள்ளலாம் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT