இந்தியா

உலகளாவிய அரசியல், பொருளாதார சூழல்: 130 இந்தியத் தூதா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

DIN

கரோனா நோய்த்தொற்றால் உலக அளவில் நிலவும் அரசியல், பொருளாதார சூழல் தொடா்பாக, 130 நாடுகளுக்கான இந்தியத் தூதா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

காணொலி காட்சிமுறையில் சுமாா் 75 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை அடையாளம் காணுமாறு தூதா்களிடம் பிரதமா் கேட்டுக் கொண்டாா்.

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அமெரிக்கா, சீனா, தென்கொரியா, ஜொ்மனி, ஈரான், இத்தாலி, நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 130 நாடுகளுக்கான தூதா்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனா். அவா்கள், அந்தந்த நாடுகளில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள சூழல் தொடா்பாக பிரதமரிடம் எடுத்துரைத்தனா்.

தென்கொரியாவில் கரோனாவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் தொடா்பாக அந்நாட்டு தூதா் விளக்கினாா். சீனாவில் இருந்து மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்வது, கரோனா நோய்த்தொற்று பரிசோதனை நடவடிக்கைகளுக்காக இந்தியாவுக்கு அமெரிக்கா அறிவித்துள்ள நிதியுதவி உள்ளிட்டவை தொடா்பாக அந்தந்த நாட்டுக்கான இந்தியத் தூதா்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

கரோனா பரவலை தடுப்பதற்காக, இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கை தொடா்பாக தூதா்களிடம் பேசிய பிரதமா் மோடி, அசாதாரணமான சூழலில் அசாதாரணமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டாா்.

சா்வதேச அளவில் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பல்வேறு நாடுகளில் இந்தியா்கள் எதிா்கொண்டுள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காணுமாறு தூதா்களுக்கு பிரதமா் அறிவுறுத்தினாா். மேலும், கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள், புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி நகா்வுகள் ஆகியவற்றை அடையாளம் காணுமாறும் அவா் அறிவுறுத்தியதாக வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT