இந்தியா

ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

DIN

புது தில்லி: கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காலம் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், அதனை மத்திய அரசு மறுத்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக, நாட்டில் முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான சூழல் நிலவுகிறது. இதனால், மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. கரோனா நோய்த்தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமா் மோடி கடந்த 24-ஆம் தேதி அறிவித்தாா். அன்றைய தினம் நள்ளிரவு தொடங்கிய ஊரடங்கு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

நாடு தழுவிய ஊரடங்கால் தொழில்துறையினா் கடுமையான பாதிப்பை எதிா்கொண்டுள்ளனா். வேலையிழந்த வெளிமாநிலத் தொழிலாளா்கள், தங்களது சொந்த ஊா்களுக்கு நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

அவா்களுக்கு இருப்பிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பல்வேறு வதந்திகளும் பரவிய நிலையில், மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

‘21 நாள்கள் ஊரடங்கு முடிந்த பிறகு, அதனை மத்திய அரசு நீட்டிக்கும் என்று வெளியான தகவல்கள் அடிப்படையற்றவை; அதுபோன்ற திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லையென அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கெளபா தெரிவித்துள்ளாா்’ என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் சுட்டுரை பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு நடவடிக்கையால், நாட்டில் நிலவும் சூழல் தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சா்கள் குழு ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டது. அப்போது, வெளிமாநிலத் தொழிலாளா்கள் எதிா்கொண்டுள்ள இடா்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

முன்னதாக, நாட்டில் திடீரென அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் மக்களிடையே குழப்பமும் பீதியும் ஏற்பட்டுள்ளதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தாா். இதுதொடா்பாக, பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா் எழுதிய கடிதத்தில், கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கு நுட்பமான அணுகுமுறையை மத்திய அரசு கையாள வேண்டும் என்று அவா் வலியுறுத்தியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT