ஆந்திரத்தில் இரண்டு ரூபாய் கட்டணத்திற்கு மருத்துவம் பார்த்து ஏழை மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு டாக்டரும் கரோனா தொற்றுக்குப் பலியாகியிருக்கிறார்.
மாநிலத்தில் பரவலாக 2 ரூபாய் மருத்துவர் என்று அறியப்படும் டாக்டர் கே.எம். இஸ்மாயில் ஹுசைனுடைய மரணம் அவர் வாழ்ந்த கர்னூல் நகர மக்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கரோனா தொற்று பல உறவுகளையும், சொந்தங்களையும் பறித்துக் கொண்டு, மக்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்திச் சென்றுள்ளது.
இதனிடையே கரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்காக முன்னிற்கும் மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும்கூட கரோனா தொற்று பாதித்து உயிரிழக்க நேரிடுகிறது.
நாள்தோறும் இரண்டு ரூபாயில் தொடங்கி, கட்டணமாக என்ன கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு மக்களுக்கு மருத்துவம் செய்துவந்தவர் டாக்டர் இஸ்மாயில் ஹுசைன்.
கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதும், சுற்றத்தினரின் வற்புறுத்தலால் சில வாரங்கள் மருத்துவமனைக்குச் செல்லாமல் தவிர்த்தார் இஸ்மாயில்.
ஆனால், அவரது மருத்துவமனை வாயிலில் தினமும் ஏராளமான மக்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து, மருத்துவர் வராமல் ஏமாற்றமடைந்து திரும்புவது குறித்து அறிந்ததும், தன்னுயிரைப் பற்றிக் கவலைகொள்ளாமல் மீண்டும் மருத்துவமனைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தார் என்று கூறுகிறார் அவரது நண்பர் ஷஃபத் அகமதுகான்.
திடீர் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் இஸ்மாயில் ஏப்ரல் 14-ம் தேதி உயிரிழந்தார். அதற்கு அடுத்த நாள் வந்த அவரது மருத்துவப் பரிசோதனையில் அறிக்கையிலிருந்துதான் அவர் கரோனா பாதித்ததால்தான் மரணம் அடைந்தார் என்பது தெரிய வந்தது.
இவர் தனிப்பட எந்த கரோனா நோயாளிக்கும் சிகிச்சை அளிக்கவில்லை. ஆனாலும், கரோனா நோயாளிகள் அதிகம்கொண்ட சிவப்பு மண்டலத்தில்தான் இவரது மருத்துவமனை உள்ளது, எனவே, கரோனா பாதித்தவர்கள் யாரேனும், அவர்களேகூட அறியாமல் இருந்திருக்கலாம், டாக்டரிடம் வேறு சிகிச்சைக்கு வந்திருக்கலாம் என்கிறார்கள் அதிகாரிகள்.
டிசம்பர் 5-ம் தேதி 76 வயதை நிறைவு செய்த இஸ்மாயில், வாழ்நாளில் எப்போதும் எந்த ஒரு காரணத்துக்காகவும் நோயாளிகளைச் சந்திக்காமல் இருந்ததில்லை. தொடர்ந்து தனது பணியை ஆற்றி வந்துள்ளார். இவரை அப்பகுதி மக்கள் பலரும் தெய்வமாகக் கொண்டாடியுள்ளனர். கர்னூல் மாவட்டத்தை மட்டும் அல்ல, அருகிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இவரிடம் சிகிச்சை பெற ஏராளமான நோயாளிகள் தினந்தோறும் வருவதுண்டு.
ஒரு நாளும் இவ்வளவுதான் கட்டணம் என்று அவர் நோயாளிகளிடம் வசூலித்தது கிடையாது. நோயாளிகள் என்ன கொடுக்கிறார்களோ அதை வாங்கிக் கொள்வார். முன்பெல்லாம் வெறும் 2 ரூபாய் கொடுத்துக்கூட மருத்துவம் பார்த்துக் கொண்டார்கள். கடைசியாகக்கூட அவர் வெறும் 5, 10 ரூபாய்க்குத்தான் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். அதுவும் நோயாளிகளின் விருப்பம்தான் என்கிறார்கள் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள்.
நூற்றுக்கணக்கான மக்கள், இவரைத் தங்களது குடும்ப மருத்துவராகக் கருதினார்கள். மிகவும் தேவைப்பட்டால் மட்டுமே பரிசோதனைகளுக்கு பரிந்துரைப்பார். மாலை 7 மணிக்குத் தொடங்கினால் கடைசி நோயாளி இருக்கும் வரை அவர் மருத்துவம் பார்த்துக் கொண்டிருப்பார். இரவு 1 மணி முதல் 2 மணி வரை கூட மருத்துவமனையிலேயே இருப்பார்.
கர்னூல் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ், எம்.டி. முடித்துவிட்டு மருத்துவராகப் பணியாற்றி வந்த இஸ்மாயில், 25 ஆண்டுகளுக்கு முன்பே, பணியில் இருந்து விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டு, சொந்தமாக மருத்துவமனை தொடங்கி ஏழை மக்களுக்காகப் பணியாற்றி வந்தார்.
அவரது கடைசி நாளும் அப்படியேதான் அமைந்திருந்தது, நோயாளிகள் அனைவருக்கும் சிகிச்சை அளித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். மறுநாள் காலையில் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இரண்டு நாள்களில் மரணம் அடைந்தார்.
இதையடுத்து அவரது மருத்துவமனை பூட்டில் சீல் வைக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர் மனைவி மற்றும் மூன்று மகள்கள், ஒரு மகனுடன் வசித்து வந்தார். அவரது இறுதிச் சடங்கில், குடும்பத்தினர் 5 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.
நாடே மிக மோசமான காலத்தைக் கடந்துகொண்டிருக்கும்வேளையில் கரோனா தொற்றுக்கே நாம் அவரை இழந்துவிட்டோம். வேறு காலமாக இருந்திருந்தால், அவரது இறுதிச் சடங்கில் கர்னூல் மாவட்ட மக்களில் பாதிப் பேராவது பங்கேற்றிருப்பார்கள் என்கிறார் டாக்டரின் நண்பர் அப்துல்.
நல்லவர், கெட்டவர் என்றெல்லாம் யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை மரணம். ஆனால், இறப்புக்குப் பின்னரும் கர்னூல் இருக்கும் காலம் வரையிலும் இரண்டு ரூபாய் டாக்டர் இஸ்மாயில் ஹுசைனுடைய பெயரும் புகழும் நிலைத்திருக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.