மாஸ்க் என்று சொன்னதும் மீன் வாங்கி வந்த அஸ்ஸாம்காரர்
கரோனா தொற்றினால் உலகமே கதிகலங்கி நிற்கும் இந்த சூழலில் கூட, நடிகர் வடிவேலு படத்தில் ஜாமீன் வாங்க மீன் சந்தைக்குப் போனவர்கள் போல அப்பாவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
குவகாத்தி: கரோனா தொற்றினால் உலகமே கதிகலங்கி நிற்கும் இந்தச் சூழலில் கூட, நடிகர் வடிவேலு படத்தில் ஜாமீன் வாங்க மீன் சந்தைக்குப் போனவர்கள் போல சில அப்பாவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அஸ்ஸாம் மாநிலம் உடல்குரி நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் வந்தார். அவருக்கு உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்திருந்த நிலையில், அவர் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளார்.
மருத்துவமனையின் மருந்தகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த செவிலியர், முகக்கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தினார். அப்போதுதான் மருந்து தருவேன் என்றும் கூறியுள்ளார்.
Advertisement
உடனடியாக வெளியே சென்ற அந்த நபர், மீன் சந்தையில் இருந்து சில மீன்களை வாங்கி வந்து செவிலியருக்குக் கொடுத்துள்ளார். இளைஞரின் இந்த விநோத செயலால் செவிலியர் செய்வதறியாது விழித்துள்ளார்.
அப்போதுதான், அஸ்ஸாம் மொழியில் மாஸ் என்றால் மீன் என்று அர்த்தம் என்பதும், மாஸ்க் அணிந்து வருமாறு கிராமத்தாரிடம் சொன்னதை அவர் மீன் வாங்கி வருமாறு கூறியதாக நினைத்துக் கொண்டதும் செவிலியருக்குப் புரிந்தது.
உடனடியாக அங்கே பணியில் இருந்த மருத்துவர், ஒரு முகக் கவசத்தை அவருக்கு வழங்கி, மருந்தையும் அளித்து, சந்தையில் இருந்து வாங்கிய மீனை வீட்டுக்கு எடுத்துச் சென்று சமைத்து சாப்பிடுமாறு அறிவுரை அளித்து அனுப்பி வைத்துள்ளார்.
உலகம் முழுக்க லட்சக்கணக்கான மக்கள் முகக்கவசத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், இதுவரை அது பற்றிய எந்த தகவலும் தெரியாமல், மாஸ்க் என்பது முகக் கவசத்தை குறிக்கும் என்பதையும் அறியாத பாமர மக்கள் இந்தியாவில் இன்னமும் ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.