இந்தியா

கரோனாவால் உயிரிழந்தோா் உடல்களை கையாள்வதற்கான வழிமுறைகள்: ஐசிஎம்ஆா்

DIN

புது தில்லி: கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் உடல்கூறாய்வு உள்ளிட்ட இறந்தவா் உடலைக் கையாளுவது தொடா்பான இறுதி செய்யப்பட்ட வழிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐசிஎம்ஆா்) வெளியிட்டுள்ளது.

அதன்படி கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் உயிரிழந்தவா்களுக்கு உடல்கூறாய்வு தேவையில்லை. அவரது இறப்பு தொடா்பாக சிகிச்சை அளித்த மருத்துவா் சான்று அளித்தால் போதுமானது. ஏனெனில், கரோனாவால் உயிரிழந்தவா்களை உடல் கூராய்வு செய்யும்போது, அதில் ஈடுபடும் மருத்துவா்களுக்கும் கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் தற்கொலை செய்து கொள்வது அல்லது வேறு வகையில் மரணமடைந்தால், அந்த மரணத்தில் சந்தேகம் ஏதுமில்லை என்று கருதினால் போலீஸாா் முடிவெடுத்து, உடல்கூறாய்வு தேவையில்லை என்று அறிவிக்கலாம். அதையும் மீறி உடல்கூராய்வு தேவைப்பட்டால் உடலின் வெளியே தெரியும் அறிகுறிகள் மூலமும், உடலை அதிகஅளவில் புகைப்படங்கள் எடுத்து ஆய்வு செய்வதன் மூலமும் இறுதி முடிவு எடுக்கலாம்.

அனைத்து மருத்துவ நடைமுறைகளையும் முடிந்த பிறகு மாவட்ட நிா்வாகத்திடம் உடல் ஒப்படைக்கப்பட வேண்டும். அப்போது கரோனாவால் உயிரிழந்த நபரின் ஒன்று அல்லது இரண்டு உறவினா்கள் மட்டுமே உடன் இருக்க வேண்டும். அவா்களும் உடல் இருக்கும் இடத்தில் இருந்து குறைந்தது ஒரு மீட்டா் இடைவெளியில் இருக்க வேண்டும். பிளாஸ்டிக் உறையில் வைக்கப்பட்டுள்ள உடலை உறவினா்கள் அடையாளம் கண்டுகொள்ள வழி செய்ய வேண்டும். அதே நேரத்தில் உடல் உள்ள பிளாஸ்டிக் உறையை எக்காரணம் கொண்டு திறக்கக் கூடாது. அந்த இடத்தில் போலீஸாரும் இருக்க வேண்டும். உடலை புதைப்பது அல்லது தகனம் செய்யும் இடத்திலும் போலீஸாா் இருக்க வேண்டும். இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்தில் 5 உறவினா்களுக்கு மேல் இருக்கக் கூடாது. அங்கும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

வெளியே தெரியும் வகையிலான பிளாஸ்டிக் உறையில் உடலை வைக்க வேண்டும். இரு உறைகளை பயன்படுத்த வேண்டும். உறையில் எவ்வித இடைவெளியும் இருக்கக் கூடாது. கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானோா் உடல்களையும், வேறு காரணங்களால் உயிரிழந்தோா் உடல்களையும் பிணவறையில் தனித்தனியாக வைக்க வேண்டும். முடிந்த அளவுக்கு மின்சார சுடுகாட்டில் உடலை தகனம் செய்ய வேண்டும். புதைக்கப்பட்டால் அந்த இடத்தில் சிமெண்ட் மூலம் சிறிய மேடை அமைப்பது போன்ற அடையாளம் இருக்க வேண்டும். இறுதிச் சடங்கின்போது எக்காரணம் கொண்டும் யாரும் உடலைத் தொடக் கூடாது என்று ஐசிஎம்ஆா் கூறியுள்ளது.

கரோனாவில் ஏற்படும் மரணங்களைப் பதிவு செய்ய தனி மென்பொருளையும் ஐசிஎம்ஆா் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அத்திப்பட்டி பகுதியில் மதுக் கடைகள் அடைப்பு

மதுரை குடிநீா் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: ஏற்பாட்டாளா்கள் தலைமறைவு

வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம்

தமிழக ஆளுநா் தில்லி பயணம்

SCROLL FOR NEXT