மேற்கு வங்கத்தில் மே 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: மம்தா
மேற்கு வங்கத்தில் மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25 முதல் பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்த பொது முடக்கம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு, 4-ஆம் கட்டமாக மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தது.
இதனிடையே மகாராஷ்டிரம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்திலும் மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் இரவு நேர ஊரடங்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற அவர், இருந்தபோதிலும் மக்கள் இரவு 7 மணிக்கு மேல் வெளியே வர வேண்டாம் என கோரிக்கை வைத்தார். மேலும், மே 27-ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டுப் பகுதிகள் அல்லாத இடங்களில் வியாபாரிகள் கடைகளைத் திறந்துகொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.