இந்தியா

தெலங்கானா சம்பவம்: ஒரு கொலையை மறைக்க 9 பேரைக் கொன்றவர் கைது

ENS

தெலங்கானாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் 9 பேரின் உடல்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவத்தில் திருப்புமுனையாக அவர்களைக் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம், வாரங்கல் புறநகரில் உள்ள கீசுகொண்டா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் விவசாயக் கிணறு ஒன்றில் கடந்த வாரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட 9 பேர் இறந்து கிடந்ததாக தகவல் வெளியானது. தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஒரு குழந்தையும் அடங்கும். இவர்கள் மேற்கு வங்கம் மற்றும் பிகாரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. 

மீட்கப்பட்ட உடல்களில் எந்த காயமும் இல்லை என்றும் அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையின் போது காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

மேலும், கீசுகொண்டா போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின் முடிவில் திடீர் திருப்பமாக பிகாரைச் சேர்ந்த 24 வயது சஞ்சய் குமார் என்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, சஞ்சய் குமார் செய்த கொலையை மறைக்க, இந்த ஒன்பது கொலைகளும் நடந்திருப்பதாக வாரங்கல் காவல்துறை ஆணையர் வி. ரவீந்திரன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மொஹம்மது மக்சூத் ஆலம் என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 37 வயது பெண் ரஃபீகாவை சஞ்சய் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஓடும் ரயிலில் இருந்து தள்ளிக் கொலை செய்துள்ளான். இதை மறைக்கவே, தற்போது 9 பேரை கிணற்றில் தள்ளிக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரஃபீகா (37) கணவருடன் விவாகரத்தாகி, தனது மூன்று பிள்ளைகளுடன் வாரங்கல்லில் ஜுனேபாக் பகுதியில் மக்சூத் என்பவரது கண்காணிப்பில் தனியாக வசித்து வந்துள்ளார். அங்கிருக்கும் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்கும் பணியை செய்யும் போது சஞ்சயுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் நாளடைவில், ரஃபீகாவின் மகள் மீது சஞ்சயின் பார்வை திரும்பியதால், இவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. உடனடியாக ரஃபீகாவை சமாதானப்படுத்திய சஞ்சய், தனது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களது ஒப்புதலைப் பெற்று ரஃபீகாவை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ரயிலில் மேற்கு வங்கம் அழைத்துச் சென்றுள்ளான்.

ரயிலில் செல்லும் போது தூக்க மாத்திரையை உணவில் கலந்து கொடுத்து, ரஃபீகா தூங்கியதும் அவளை ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளிக் கொன்றுவிட்டு, மறு ரயிலில் வாரங்கல் திரும்பிவிட்டார். ஊர் திரும்பியதும், ரஃபீகாவின் உறவினர் மக்சூத்திடம், அவள் எங்களது உறவினர் வீட்டிலேயே தங்கியிருக்க விரும்பியதாகக் கூறி ஏமாற்றியுள்ளார்.

ஆனால் அவரைப் பற்றி குடும்பத்தார் அவ்வப்போது கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தனர். காவல்துறையில் புகார் அளிப்பதாகவும் மிரட்டினர். இதனால் மக்சூத் குடும்பத்தினர் அனைவரையும் கொல்ல சஞ்சய் திட்டம் தீட்டினான்.

மே 20-ம் தேதி தனக்கு பிறந்தநாள் என்று சொல்லி தான் பணியாற்றும் தொழிற்சாலையில் விருந்தளித்துள்ளான். அதில் மக்சூத் குடும்பமும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் உணவில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்து, அனைவரும் தூங்கிய பிறகு ஒவ்வொருவராக இழுத்துச் சென்று விவசாயக் கிணற்றில் தள்ளிக் கொலை செய்துள்ளான். முன்னதாக, அனைவரும் அணிந்திருந்த நகைகளையும் சஞ்சய் அபகரித்துக் கொண்டுள்ளான். அனைத்துப் பொருட்களும் அவனது அறையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

ஒரே ஒரு கொலையை மறைக்க ஒட்டுமொத்த குடும்பம் உட்பட 9 பேரை இளைஞர் ஒருவர் கிணற்றில் தள்ளிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT