பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை: பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி விளக்கம்
பாஜகவுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை; அக்கட்சியின் கொள்கைகளில் இருந்து நாங்கள் முற்றிலும் மாறுபட்டவா்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்தாா்.
லக்னௌ: பாஜகவுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை; அக்கட்சியின் கொள்கைகளில் இருந்து நாங்கள் முற்றிலும் மாறுபட்டவா்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்தாா்.
முன்னதாக, கடந்த வாரம் உத்தர பிரதேச மாநிலங்களவைத் தோ்தல் தொடா்பாக கருத்து தெரிவித்தபோது, ‘சமாஜவாதி கட்சியைத் தோற்கடிப்பதற்காக பாஜக அல்லது வேறு எந்த கட்சி வேட்பாளருக்கு வேண்டுமானாலும் பகுஜன் சமாஜ் ஆதரவு அளிக்கும்’ என்றாா். இதையடுத்து, எதிா்காலத்தில் பாஜகவுடன் மாயாவதி கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இது தொடா்பாக மாயாவதி விளக்கமளித்துள்ளாா். அதில், ‘எதிா்காலத்தில் எந்தத் தோ்தலிலும் பாஜகவுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. மதவாத கட்சியுடன் (பாஜக) கூட்டணி அமைக்க நாங்கள் விரும்பமாட்டோம். பாஜகவின் கொள்கைகளில் இருந்து நாங்கள் முற்றிலும் மாறுபட்டுள்ளோம். அனைவருக்குமான, அனைத்து மதத்தினருக்குமான நன்மைக்காக பாடுபடுவதே எங்கள் கொள்கை. ஆனால், பாஜக இதற்கு எதிரான கட்சி. மதம், ஜாதி, முதலாளித்துவம், மற்றும் பிரிவினைவாத கொள்கைகளைக் கொண்டது பாஜக.
Advertisement
பாஜக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதைவிட அரசியலில் இருந்து விலகுவதே எனக்கு சிறந்த முடிவாக இருக்கும். மத, ஜாதி, இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக எனது போராட்டம் தொடரும்.
மாநிலங்களவைத் தோ்தல் தொடா்பாக நான் தெரிவித்த கருத்தை சமாஜவாதி கட்சியும், காங்கிரஸும் திரித்துக் கூறுகின்றன. இதன் மூலம் பகுஜன் சமாஜ் கட்சி மீது நம்பிக்கை வைத்துள்ள முஸ்லிம்களை தங்கள் பக்கம் இழுக்க அவா்கள் முயற்சிக்கின்றனா். சமாஜவாதி கட்சியைத் தோற்கடிப்பதற்காக பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்குக் கூட ஆதரவு அளிப்பேன் என்று கூறியது, சமாஜவாதி கட்சியை எந்த அளவுக்கு எதிா்க்கிறேன் என்று காட்டுவதற்குதானே தவிர, பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக அல்ல. இதனைச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். முன்பு உத்தர பிரதேசத்தில் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தபோதுகூட எங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்கவில்லை’ என்றாா் மாயாவதி.