வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி: தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புது தில்லி: வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி காரணமாக தமிழக மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வானிலை துறையின் புயல் எச்சரிக்கை பிரிவு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இன்று (அக். 9) அதிகாலை வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவானது. இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணி அளவில் வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது.
மத்திய வங்கக் கடலில் காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக இது நாளை (அக்.10) வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், ஒடிசா, கடலோர ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராயலசீமா, கர்நாடகத்தின் உள்புற பகுதிகள் மற்றும் மராத்வாடா ஆகிய இடங்களில் ஆங்காங்கே வரும் 10 அன்று மிக அதிக அளவில் மழையும் பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடலோர ஒடிசா, கடலோர ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராயலசீமா, கர்நாடகத்தின் உட்புற பகுதிகள், மராத்வாடா மற்றும் விதர்பா ஆகிய இடங்களில் ஆங்காங்கே வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மிக அதிக அளவில் மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 11-ம் தேதி அதிகாலை முதல் 12 -ம் தேதி மதியம் வரை ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் கடற்கரைகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், 9-ம் தேதி முதலே வானிலை மோசமாக இருக்கக்கூடும் என்பதாலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பும் படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.