ஊதியம் வழங்கக்கோரி தில்லியில் தீவிரமடையும் மருத்துவர்கள் போராட்டம்
தில்லி மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் முதல் ஊதியம் வழங்காததை கண்டித்து மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தில்லி மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் முதல் ஊதியம் வழங்காததை கண்டித்து மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு தில்லியில் மாநகராட்சியின் மிகப்பெரிய மருத்துவமனையான ஹிந்து ராவ் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் முதல் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து கடந்த 6-ஆம் தேதி முதல் பணியை புறக்கணித்து மருத்துவர்கள் வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஊதியம் வழங்கவில்லை என்றும், ஊதியம் வழங்கவில்லை என்றால் இனி பணியில் ஈடுபட இயலாது என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊதியம் வழங்காததால், பொருளாதார ரீதியில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும், இது குறித்து கடிதம் மூலம் வலியுறுத்தியும் மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதால் மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊதியத்தை வழங்காமல் தில்லி மாநகராட்சி இழுத்தடிப்பு செய்து வருவதாகவும், தில்லி அரசு நிதியை ஒதுக்கவில்லை என்று மாநகராட்சித் தரப்பில் பதிலளிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.