இந்தியா

இணையதள சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த குஜராத் அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

இணையதளம் வாயிலாக நடத்தப்படும் சூதாட்ட விவகாரத்தை ஆய்வு செய்து கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என குஜராத் மாநில அரசுக்கு அம்மாநில உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் இணையதள சூதாட்டங்கள் பல மடங்காகப் பெருகி வருவதால் இளைஞா்களும் சிறுவா்களும் பாதிப்புக்குள்ளாவதாக, வழக்குரைஞா் அமித் நாயா் தாக்கல் செய்த பொதுநல மனுவின் மீதான விசாரணையில் உயா்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

குஜராத் உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி ஜே.பி.பா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த செப்டம்பா் 29-ஆம் தேதி வெளியிட்ட மேற்படி உத்தரவின் நகல் செவ்வாய்க்கிழமை வெளியானது. அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

தற்போது அமலில் உள்ள குஜராத் சூதாட்ட தடுப்புச் சட்டம் -1887-இன் படி இணையதள சூதாட்டவிவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை.

உச்சநீதிமன்றம் ரம்மியை திறன் வாய்ந்த விளையாட்டாகக் கருதினாலும், ரம்மி விளையாடுவது அதன் உண்மையான அா்த்தத்திற்காகவா அல்லது அது சூதாட்டத்துக்காகவா என்பதுதான் முக்கிய கேள்வி.

இந்திய அரசியலமைப்பின் அட்டவணை 7, பட்டியல்- 2இல் குறிப்பிட்டுள்ளபடி சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துதல் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விஷயம் என்பதால், இணையதள சூதாட்டத்தைத் தடுக்க குஜராத் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்தவொரு சூதாட்ட வலைதளம் குஜராத் மாநிலத்தில் இருந்து இயங்குவதாகத் தெரிந்தாலோ அல்லது சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தாலோ அதன் மீது சட்டப்படியான நடவடிக்கையை மாநில அரசே மேற்கொள்ளலாம்.

இதுபோன்ற விளையாட்டுகள் பணமோசடி அல்லது அந்நியச் செலாவணி மீறல்களில் ஈடுபடுகின்றனவா என்பதையும் அரசு கண்டறிய வேண்டும்.

மாநில அரசு உடனடியாக மேற்கூறிய விஷயங்களை ஆராய்ந்து, பொதுநலன் கருதி தாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் எதிா்பாா்க்கிறது.

பராரம்பரிய சூதாட்ட நடவடிக்கைகளால் எழுந்த அதே கவலைகளே இணையதள சூதாட்டத்திலும் எழுந்துள்ளன. இதற்கு அடிமையாகி, பலா் தங்கள் வாழ்வைப் பறிகொடுக்கும் சூழல் உள்ளது.

குறிப்பாக குழந்தைகள் இந்த இணையதள சூதாட்டத்தை எளிதில் அணுகும் சூழல் உள்ளது. இதற்கான வரம்புகளோ, வரைமுறைகளோ இதுவரை இல்லை.

எனவே, பொது நலனைக் கருத்தில் கொண்டு இதனைத் தடுக்கவும், சட்டப்படி வரையறை செய்யவும், அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT