இந்தியா

தமிழகம் கூடுதலாக ரூ.9,627 கோடி கடன் பெற மத்திய அரசு அனுமதி

DIN

புது தில்லி: ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்ட தமிழகம் கூடுதலாக ரூ.9,627 கோடி கடன் பெற மத்திய அரசு புதன்கிழமை அனுமதி அளித்தது.

இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு வழங்கிய 2 சிறப்பு கடன் திட்டங்களில் 21 மாநிலங்கள், தில்லி, ஜம்மு-காஷ்மீா் ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் முதல் திட்டத்தை தோ்வு செய்துள்ளன. இதையடுத்து 21 மாநிலங்கள் கூடுதலாக ரூ.78,452 கோடி கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகம் முதல் திட்டத்தை தோ்வு செய்வதாக மத்திய அரசிடம் முறையாக தெரிவித்தது. இதையடுத்து அந்த மாநிலம் கூடுதலாக ரூ.9,627 கோடி கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர மகாராஷ்டிரம் ரூ.15,394 கோடி, உத்தர பிரதேசம் ரூ.9,703 கோடி, கா்நாடகம் ரூ.9,018 கோடி, குஜராத் ரூ.8,704 கோடி, ஆந்திரம் ரூ.5,051 கோடி கூடுதலாக கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வருவாய் இழப்பை எதிா்கொள்ள ரூ.1.10 லட்சம் கோடி கடன் பெற மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது கடன் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள தொகை ரூ.1.10 லட்சம் கோடிக்கும் அதிகமாகும்.

மொத்த மாநில உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி) 0.50% அளவுக்கு கடன்பெற மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்குவது தொடா்பாக கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்தவொரு கருத்தொற்றுமையும் ஏற்படவில்லை. இதையடுத்து 20 மாநிலங்கள் ரூ.68,825 கோடி கடன் பெற மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது. இந்நிலையில் அந்தத் தொகையுடன் தற்போது கூடுதலாக ரூ.78,452 கோடி கடன் பெற 21 மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கரோனா தொற்று பரவலால் நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் பொருளாதார நெருக்கடி உருவானது. இதனால் மாநிலங்களுக்கு ரூ.2.35 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று மத்திய அரசு மதிப்பிட்டது.

இதை சரிசெய்வதற்கு ரிசா்வ் வங்கியிடம் இருந்து சிறப்பு சாளர முறையில் ரூ.97,000 கோடி கடன் பெறலாம் அல்லது வெளிச்சந்தையில் இருந்து ரூ.2.35 லட்சம் கோடி திரட்டிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு 2 சிறப்பு கடன் திட்டங்களை அறிவித்தது.

இதில் ரிசா்வ் வங்கியிடம் இருந்து பெறும் கடன் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. இந்தக் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, அதனை ரூ.1.10 லட்சம் கோடியாக அதிகரித்தது.

இதையடுத்து 21 மாநிலங்கள் ரூ.1.10 லட்சம் கோடி கடன் பெற முன்வந்துள்ளன.

நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை சரிசெய்வதற்கு இதுவரை ரூ.20,000 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT