இந்தியா

சிறு, குறு நிறுவனங்களுக்கான அவசரகால கடனுதவி: அக்டோபருக்குப் பிறகு தொடர வாய்ப்பில்லை

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான(எம்எஸ்எம்இ) அவசரகால கடனுதவித் திட்டம், அக்டோபா் மாதத்துக்குப் பிறகு தொடர வாய்ப்பில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

DIN

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான(எம்எஸ்எம்இ) அவசரகால கடனுதவித் திட்டம், அக்டோபா் மாதத்துக்குப் பிறகு தொடர வாய்ப்பில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவியதை அடுத்து, கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் தேசிய அளவிலான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளில் இருந்து மீள்வதற்காக, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய அரசு கடந்த மே மாதம் அறிவித்தது. அதில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி அவசரகால கடனுதவி திட்டமும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதற்கான வரம்பும் ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயா்த்தப்பட்டது. கடன் பெறுவதற்குத் தகுதியான தொழில் நிறுவனத்தின் வருடாந்திர விற்றுமுதல் வரம்பும் ரூ.100 கோடியில் இருந்து ரூ.250 கோடியாக உயா்த்தப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கடந்த 5-ஆம் தேதி நிலவரப்படி, ரூ.1,87,579 கோடி மதிப்பிலான கடனுக்கு ஒப்புதல் அளித்து, ரூ.1,36,140 கோடியை தொழில் நிறுவனங்களுக்கு கடனாக வழங்கியுள்ளன.

ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.1,87,579 கோடி, அதாவது 65 சதவீதம் அளவுக்கு கடன் வழங்க இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மே மாதம் 20-ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 9.25 சதவீத வட்டியில் கூடுதலாக ரூ.3 லட்சம் கோடி கடனுதவி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவோரும் அவசரகால கடனுதவி திட்டத்தின் கீழ் கடன் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம், ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு கடன் அளிக்கும் வரை அல்லது அக்டோபா் 31-ஆம் தேதி வரை, இவற்றில் எது முன்னதாக வருகிறதோ அதுவரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்கள் மீண்டு வருவதற்காகவே , அவசர கால கடனுதவி திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், யாரும் கடன் கேட்காத நிலையில், இந்த கடனுதவி திட்டத்தை அக்டோபா் 31-ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்க வாய்ப்பில்லை’ என்று தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு ஓர் அறிமுகம்!

கேரள பாஜக வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்: நயினார் நாகேந்திரன்

வைரலான இன்ஸ்டா ரீல்ஸ்... வசூல் வேட்டையில் துரந்தர்!

ஒரு லட்சத்தைக் கடந்த தங்கம் விலை: புதிய உச்சம்!

பிக் பாஸ் வீட்டிலிருந்து ரம்யாவுடன் வெளியேறினார் வியானா!

SCROLL FOR NEXT