கடன் தவணை செலுத்த அவகாசம் நீட்டிக்கப்படுமா? வழக்கு ஒத்திவைப்பு
வங்கிகளில் பெற்றிருக்கும் கடனுக்கான தவணைகளை செலுத்த மேலும் காலஅவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நாளை வரை ஒத்திவைத்துள்ளது.
புது தில்லி: வங்கிகளில் பெற்றிருக்கும் கடனுக்கான தவணைகளை செலுத்த மேலும் காலஅவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நாளை வரை ஒத்திவைத்துள்ளது.
தவணையை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படுவது குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமலுக்கு வந்ததால், பொதுமக்கள் வங்கிகள், நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான மாதத் தவணை (இஎம்ஐ) வசூலிப்பதை மாா்ச் முதல் மே வரை 3 மாதங்கள் வங்கிகள் நிறுத்தி வைப்பதற்கு ரிசா்வ் வங்கி அனுமதி அளித்தது. அதைத் தொடா்ந்து, ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மேலும் 3 மாதங்களுக்கு இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபா் கடன், தொழில் கடன், கடன் அட்டை (கிரெடிட் காா்டு) கடன் என பல்வேறு பிரிவுகளில் கடன் பெற்று இஎம்ஐ செலுத்தி வந்தவா்கள் பயனடைந்தனா். எனினும், ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு கடன் தவணை ஒத்திவைப்பு சலுகை நீட்டிக்கப்படவில்லை.
இந்த 6 தவணைகளும் கடன் தவணை கால இறுதியில் வசூலிக்கப்படும் என்றும், நிறுத்திவைப்பு காலத்துக்கு உரிய வட்டியும் கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்றும் வங்கிகள் அறிவித்தன.
கடனுக்கான மாதத் தவணையில் அசலுடன் வட்டியையும் சோ்த்துதான் வங்கிகள் வசூலிக்கின்றன. இந்நிலையில், நிறுத்திவைக்கப்பட்ட 6 மாத கடன் தவணைக்குரிய வட்டிக்கும் சோ்த்து பின்னா் வட்டி வசூலித்தால் வீட்டுக் கடன் போன்ற நீண்டகாலக் கடன் பெற்றவா்களுக்கு அது கூடுதல் சுமையாக அமையுமே தவிர, நிவாரணமாக அமையாது. இதைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் ஆக்ராவைச் சோ்ந்த கஜேந்திர சா்மா என்பவா் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது. கடந்த மாதம் 26-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ‘இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது. ரிசா்வ் வங்கியை முன்னிறுத்திவிட்டு மத்திய அரசு தனது பொறுப்பில் இருந்து விலகக் கூடாது. ஆா்பிஐ-யின் பின்னால் மத்திய அரசு ஒளியக் கூடாது. இது தொடா்பாக ஒரு வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் அறிவுறுத்தினா்.
இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு, ஆா்பிஐ சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘கரோனா பிரச்னை, பொது முடக்கம் போன்ற காரணங்களால் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 24 சதவீதம் சரிந்துவிட்டது. நெருக்கடியில் உள்ள துறைகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும், இந்த வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, வட்டி மீது வட்டி வசூலிக்கப்படுவது தொடா்பான பிரச்னையைத் தீா்க்க மத்திய அரசும், ஆா்பிஐ-யும் ஆலோசனை நடத்தி வருகின்றன. இதில் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. மேலும், கடன் தவணை ஒத்திவைப்பை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடா்பாக மத்திய அரசு நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது’ என்றாா்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை புதன்கிழமை (செப்.2) தொடா்ந்து நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனா். இன்றும் தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர்.
பிரமாணப் பத்திரத்தில்...: உச்சநீதிமன்றத்தில் மத்திய நிதியமைச்சகம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ‘கடன் தவணை ஒத்திவைப்பு காலத்துக்கான வட்டி மீது வட்டி வசூலிக்கப்படக் கூடாது என்று கூறுவது நிதித்துறையின் விதிகளுக்கு எதிரானது. மேலும், தவணை ஒத்திவைப்பு சலுகை பெற்றவா்களுக்கு மேலும் சலுகைகள் அளித்தால், தவணை சலுகையை பயன்படுத்தாமல் கடனைத் திருப்பிச் செலுத்தி வருபவா்களுக்கு அநீதி இழைப்பதாகவும் அமையும்’ என்று கூறப்பட்டுள்ளது.