செப்.21 முதல் சுற்றுலாவிற்காகத் திறக்கப்படும் தாஜ்மகால்
கரோனா தொற்றால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் ஆக்ரா கோட்டை மற்றும் தாஜ்மஹால் செப்டம்பர் 21 முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் ஆக்ரா கோட்டை மற்றும் தாஜ்மஹால் செப்டம்பர் 21 முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக சுற்றுலாத் தலங்கள், வரலாற்று கால சின்னங்கள் உள்ளிட்டவை கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை உள்ளிட்டவை செப்டம்பர் 21-ம் தேதி முதல் திறக்கப்படவுள்ளதாக இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தாஜ்மஹாலில் ஒவ்வொரு நாளும் சுமார் 5,000 சுற்றுலாப் பயணிகளும் ஆக்ரா கோட்டையில் நாளொன்றுக்கு 2,500 சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாஜ்மஹால் மற்றும் ஆக்ராவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சமூக இடைவெளிகளைப் பின்பற்றவும், முகக்கவசங்களை அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி ஆக்ரா மாவட்ட நீதிமன்றம் தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டையைத் தவிர்த்து பிற வரலாற்று நினைவு இடங்களைத் திறக்க அனுமதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.