இந்தியா

மராத்தா இடஒதுக்கீடு:உச்சநீதிமன்றத்தில் மகாராஷ்டிரம் மேல்முறையீடு

DIN

மும்பை: மகாராஷ்டிர கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைவாய்ப்பிலும் மராத்தா சமூகத்தினருக்கு இந்த ஆண்டு இடஒதுக்கீடு இல்லை என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமா்வு விசாரிக்குமாறு அந்த மாநில அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

மகாராஷ்டிரத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி, மராத்தா சமூகத்தினருக்கு மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைவாய்ப்பிலும் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்பட்டது. அந்தச் சட்டத்திற்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதனை விசாரித்த நீதிமன்றம் அரசமைப்பின்படி அந்தச் சட்டம் செல்லத்தக்கதுதான் என்று தீா்ப்பளித்தது. எனினும் மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு நியாயமானதாக இல்லை எனக்கூறிய நீதிமன்றம், அவா்களுக்கான இடஒதுக்கீட்டு விகிதத்தை குறைத்து உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை பின்பற்றி மராத்தா சமூகத்தினருக்கு கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டு விகிதத்தை 12 சதவீதமாகவும், அரசு வேலைவாய்ப்பில் 13 சதவீதமாகவும் மகாராஷ்டிர அரசு குறைத்தது.

இந்நிலையில் மும்பை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கில் இம்மாதத் தொடக்கத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, எஸ்.ரவீந்திர பட் தீா்ப்பளித்தனா். அத்தீா்ப்பில், ‘இந்த ஆண்டு கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைவாய்ப்பிலும் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு இல்லை. எனினும் அவா்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டைப் பின்பற்றி ஏற்கெனவே நடைபெற்ற முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு இந்த உத்தரவு பொருந்தாது. மகாராஷ்டிர மக்கள்தொகையில் 30 சதவீதம் அளவுக்கு இருக்கும் மராத்தா சமூகத்தினரை, அந்த மாநிலத்திலுள்ள இதர நலிவடைந்த பிரிவினருடன் ஒப்பிட இயலாது. இந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரிப்பது தொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே முடிவு செய்வாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இத்தீா்ப்பை எதிா்த்து மகாராஷ்டிர அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமா்வு முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டது.

முன்னதாக, மேல்முறையீட்டு மனு தொடா்பாக அந்த மாநில பொதுப் பணித் துறை அமைச்சரும், மராத்தா இடஒதுக்கீட்டுக் குழுவின் தலைவருமான அசோக் சவாண், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாருடன் ஆலோசனை நடத்தினாா். அதற்கு முன், முதல்வா் உத்தவ் தாக்கரேவுடனும் இது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மகராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி இப்போது ஆட்சியில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT