கேரளத்தில் 2-வது நாளாக 7 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு
கேரளத்தில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 7 ஆயிரத்துக்கும் மேல் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
கேரளத்தில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 7 ஆயிரத்துக்கும் மேல் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி மாநில முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கேரளத்தில் புதிதாக 7,445 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் 956 பேருக்கும், எர்ணாகுளத்தில் 924 பேருக்கும், மலப்புரத்தில் 915 பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் 21 பேர் கரோனாவுக்கு பலியாகியிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 677 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 62 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 309 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 6,404 பேர் உள்ளூர் பரவல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 561 பேருக்கு யார் மூலம் தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3,391 பேருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. தற்போது 56,709 பேர் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,17,921 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.