பெங்களூருவில் சாலையோரம் பிரசவித்த தாய்க்கும் சேய்க்கும் வாழ்வளித்த பல் மருத்துவர்
மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்து தாயையும், சேயையும் காப்பாற்றியுள்ளார் பெங்களூருவைச் சேர்ந்த பல் மருத்துவர்.
பெங்களூரு: மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்து தாயையும், சேயையும் காப்பாற்றியுள்ளார் பெங்களூருவைச் சேர்ந்த பல் மருத்துவர்.
இந்த சம்பவம் ஏப்ரல் 14ம் தேதி காலையில் நடந்துள்ளது. இது தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல் மருத்துவர் ரம்யா ஹிமனீஷுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
நிறைமாத கர்ப்பிணியான சாந்தி, பிரசவ வலியோடு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், ரம்யாவின் பல் மருத்துவமனைக்கு அருகே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
Advertisement
பிறந்த குழந்தை அசைவற்று இருந்ததால் அது இறந்துவிட்டதாகக் கருதிய சாந்தியின் கணவர், அதை ஒரு பேப்பரில் சுற்றி வைத்துவிட்டார். இந்த நிலையில், சாந்திக்கு ரத்தப்போக்கும் நிற்கவில்லை. இந்த நிலையில் தான் ரம்யா அங்கு வந்தார். உடனடியாக குழந்தையையும், தாயையும் தனது கிளினிக்கைத் திறந்து அதற்குள் கொண்டு சென்று இருவருக்கும் தேவையான முதலுதவிகளை செய்தார். குழந்தைக்கு சில அடிப்படை முதலுதவி செய்ததும் அது உயிர்பிழைத்து விட்டது என்கிறார் ரம்யா.
பிறகு ஒரு ஆம்புலன்ஸை வரவழைத்து தாயையும் சேயையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.