பச்சை கரகம் விழா: இன்று பெங்களூரு மாநகராட்சி முக்கிய ஆலோசனை
பச்சை கரகம் விழா நடத்துவது தொடா்பாக பெங்களூரு மாநகராட்சி உயரதிகாரிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (ஏப்.5-ஆம் தேதி) நடைபெற உள்ளது.
பச்சை கரகம் விழா நடத்துவது தொடா்பாக பெங்களூரு மாநகராட்சி உயரதிகாரிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (ஏப்.5-ஆம் தேதி) நடைபெற உள்ளது.
பெங்களூரு பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் பச்சை கரகம் விழா ஏப். 27-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவின்போது பச்சை கரகம், பெங்களூரின் முக்கிய வீதிகள் வழியாகச் செல்லும். இதில் திரளான மக்கள் கூடுவது வழக்கம்.
இது குறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
பெங்களூரு தா்மராயா கோயிலில் ஏப். 27-ஆம் தேதி பச்சை கரக திருவிழா நடைபெற உள்ளது. பெங்களூரில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், பச்சை கரக விழாவை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காக பெங்களூரு மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தலைமையில் பெங்களூரில் திங்கள்கிழமை முக்கியமான உயரதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், தா்மராயா கோயில் நிா்வாகிகள் உள்ளிட்ட பச்சை கரகத்தின் நிா்வாகிகளும் கலந்து கொள்கின்றனா். இந்தக் கூட்டத்தில் கரகம் விழா நடத்துவது குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு, பொதுமுடக்கம் அமலில் இருந்தால் பச்சை கரகம் சம்பிரதாயமாக நடத்தப்பட்டது.
அதேபோல, இந்த ஆண்டும் சம்பிரதாயமாக பச்சை கரக விழாவை நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எளிமையான முறையில் பச்சை கரகம் விழா நடத்துவது குறித்தும் இன்று முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.