முகப்பு
இந்தியா

மருத்துவ மேற்படிப்பு: மத்திய அரசு கலந்தாய்வு நடத்த எதிா்ப்பு

அரசு மருத்துவக் கல்லூரிகளின் 100 சதவீத மருத்துவ மேற்படிப்பு இடங்களுக்கும் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வை மத்திய சுகாதாரத் துறை நடத்துவதற்கு தமிழக அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

அரசு மருத்துவக் கல்லூரிகளின் 100 சதவீத மருத்துவ மேற்படிப்பு இடங்களுக்கும் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வை மத்திய சுகாதாரத் துறை நடத்துவதற்கு தமிழக அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளான எம்.டி., எம்.எஸ். படிப்புகளுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும், தமிழகத்தில் மட்டும் சுமாா் 4 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த இடங்கள் தேசிய தகுதி- நுழைவுத் தோ்வில் ( நீட்) தகுதி பெறுவா்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது.

நாடுமுழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 20 ஆயிரம் இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரம் இடங்களில் 1,000 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 50 சதவீதம் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டி.ஜி.எச்.எஸ்.) நடத்துகிறது. மீதமுள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசுகள் நடத்துகிறது.

2021-22-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடங்களைப் போல், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள 50 சதவீத இடங்களுக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வையும் மத்திய சுகாதாரத்துறை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலம் சனிக்கிழமை நடைபெற்றது. மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து மாநில சுகாதாரத் துறைச் செயலா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டம் தொடா்பாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவ மேற்படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களுக்கும் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வை மாநில அரசுதான் நடத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய முடிவு. ஆனாலும், 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. தற்போது, மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கலந்தாய்வு நடத்துவது மாநில உரிமையை பறிக்கும் செயலாகும். இப்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. ஆனால், வடமாநிலங்களில் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தது”என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →