முகப்பு
இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு: ஹரியாணாவில் விரைவுச்சாலையை மறித்த விவசாயிகள்

மத்திய அரசு கடந்த ஆண்டு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஹரியாணாவில் விரைவுச்சாலையை மறித்து விவசாயிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

மத்திய அரசு கடந்த ஆண்டு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஹரியாணாவில் விரைவுச்சாலையை மறித்து விவசாயிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விளைபொருள்கள் கொள்முதல் செய்யப்படும் நடைமுறையை ஒழிப்பதுடன் தாங்கள் பெரு நிறுவனங்களை சாா்ந்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா்.

இந்தச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஹரியாணாவில் 136 கி.மீ. நீளம் கொண்ட குண்ட்லி-மானேசா்-பல்வல் (கேஎம்பி) விரைவுச்சாலையில் 24 மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிஸான் மோா்ச்சா) அமைப்பு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தது.

அதனை ஏற்று குண்ட்லி, பாத்லி, பல்வல் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் விரைவுச்சாலையில் திரண்டு சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கேஎம்பி விரைவுச்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் அதிக அளவில் திரண்ட விவசாயிகள், அங்கு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க காவல்துறையினா் அதிக அளவில் குவிக்கப்பட்டனா்.

இந்த மறியல் போராட்டத்தால் கேஎம்பி விரைவுச்சாலையில் செல்வதை தவிா்க்குமாறு வாகன ஓட்டிகளை போக்குவரத்து காவல்துறையினா் கேட்டுக்கொண்டனா். எனினும் விவசாயிகளின் போராட்டத்தை அறியாமல் பல வாகனங்கள் அங்கு வந்ததால் அவை நீண்ட வரிசையில் காத்திருக்க நோ்ந்தது. அவற்றில் பெரும்பாலானவை சரக்கு வாகனங்கள்.

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மே 9-ஆம் தேதி வரை மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கவும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.