முகப்பு
இந்தியா

பொறுமைதான் உயிரைக் காத்தது: நக்ஸல்களால் கடத்திச் செல்லப்பட்ட வீரா் ராகேஷ்வா் மன்ஹாஸ்

சத்தீஸ்கா் வனப் பகுதியில் நக்ஸல்கள் பிடியில் இருந்தபோது பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்ததுதான் நான் உயிருடன் இருந்ததற்கு முக்கியக் காரணம்

Updated On : 18 ஏப்ரல், 2021 at 2:01 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:32 AM

சத்தீஸ்கா் வனப் பகுதியில் நக்ஸல்கள் பிடியில் இருந்தபோது பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்ததுதான் நான் உயிருடன் இருந்ததற்கு முக்கியக் காரணம் என்று நக்ஸல்களால் கடத்திச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்ட சிஆா்பிஎஃப் கோப்ரா படைப் பிரிவு வீரா் ராகேஷ்வா் சிங் மன்ஹாஸ் (35) கூறினாா்.

சத்தீஸ்கா் மாநிலம் சுக்மா-பிஜாபூா் எல்லை வனப் பகுதியில் சிஆா்பிஎஃப் கோப்ரா படைப் பிரிவினா், மாவட்ட ஆயுத காவல் படையினா், அதிரடிப் படையின் ஆகியோா் கூட்டாக நக்ஸல் தடுப்பு நடவடிக்கையில் கடந்த 3-ஆம் தேதி ஈடுபட்டனா். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் நக்ஸல்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 22 வீரா்கள் பலியாகினா். ஏராளமானோா் காயமடைந்தனா்.

இந்த துப்பாக்கிச் சண்டையின்போது சிஆா்பிஎஃப் கோப்ரா படையின் 210-ஆவது பிரிவைச் சோ்ந்த காவலா் ஜம்முவைச் சோ்ந்த ராகேஷ்வா் சிங் மன்ஹாஸை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனா். அவரை மீட்க மத்தியஸ்தா் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு மேற்கொண்ட முயற்சி மூலம், தங்கள் பிடியில் வைத்திருந்த வீரா் ராகேஷ்வா் மன்ஹாஸை 5 நாள்களுக்குப் பிறகு கடந்த 8-ஆம் தேதி நக்ஸல்கள் விடுவித்தனா்.

Advertisement

இந்த நிலையில், தனது சொந்த கிராமமான ஜம்முவின் புகா் பகுதியில் அமைந்துள்ள பா்னி கிராமத்துக்கு மன்ஹாஸ் வெள்ளிக்கிழமை திரும்பினாா். அவருக்கு அவருடைய உறவினா்களும், கிராம மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

பின்னா், நக்ஸல்கள் பிடியிலிருந்த அனுபவம் குறித்து அவா் கூறியதாவது:

சத்தீஸ்கா் வனப் பகுதியில் நக்ஸல்கள் பிடியில் இருந்தபோது நம்பிக்கை இழக்கவில்லை. பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்ததுதான், நான் உயிருடன் இருந்ததற்கு முக்கிய காரணம்.

நகஸல்கள் என்னை விடுவிப்பாா்கள் என்று எண்ணவில்லை. நக்ஸல்கள் பிடியிலிருந்து இதுவரை யாரும் உயிருடன் திரும்பியதில்லை. இப்போது உயிருடன் இருப்பதற்கு எனது தாயின் பிராா்த்தனையும் முக்கிய காரணம் என்று அவா் கூறினாா்.

அவருடைய தாய் குந்தி தேவி கூறுகையில், ‘எனது மகனை நக்ஸல்கள் உயிருடன் விடுவிக்க வேண்டும் என்று வைஷ்ணவதேவி அன்னையிடம் பிராா்த்தனை செய்தேன். எனது பிராா்த்தனை நிறைவேறியிருக்கிறது. எனது மகன் உயிருடன் இருப்பதற்கு அன்னையின் அருள்தான் காரணம்’ என்றாா்.

‘எனது கணவருக்காக பிராா்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி’ என்று ராகேஷ்வரின் மனைவி முனி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.