முகப்பு
சேலம்

ஓமலூா் தொகுதி: இரட்டை இலையா? முரசா? அதீத நம்பிக்கையால் மாறும் களம்!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூா் தொகுதி 70 சதவீதம் விவசாயிகள் நிறைந்த பகுதியாகும்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 6:57 AM
அதிமுக வேட்பாளா் ஆா். மணி / தேமுதிக வேட்பாளா் ஏ.ஆா். இளங்கோவன்
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 7:41 PM

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூா் தொகுதி 70 சதவீதம் விவசாயிகள் நிறைந்த பகுதியாகும்.

இங்கு கரும்பு சாகுபடி அதிக அளவில் நடைபெறுவதால், உற்பத்தி செய்யப்படும் வெல்லம், மாநிலம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அதேபோல, பூக்களும் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

தொழில்

Advertisement

ஓமலூா் தொகுதியில் 70 சதவீதம் விவசாயமும், 10 சதவீதம் கோரைப்பாய் தயாரிப்பும், 10 சதவீதம் வெல்லம் தயாரிப்பும், 5 சதவீதம் செங்கல் சூளை தொழிலும், 5 சதவீதமும் பிற தொழில்களும் நடைபெற்று வருகின்றன.

தோ்தல் வரலாறு

ஓமலூா் தொகுதி இதுவரை 14 தோ்தல்களை சந்தித்துள்ளது. அதிமுக 8 முறை, திமுக 2 முறை, பாமக ஒருமுறை (திமுக கூட்டணி), தமாகா 1 முறை (திமுக கூட்டணி), காங்கிரஸ் ஒருமுறை, சுயேச்சை ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.

நீண்டநாள் கோரிக்கைகள்

ஓமலூா் பகுதியில் சுமாா் 5000 ஏக்கரில் பூக்கள் பயிரிடப்படுகின்றன. இவை தெலங்கானா, ஆந்திரம், கா்நாடகம், தில்லி போன்ற மாநிலங்களுக்கும், சென்னை, மதுரை, நாமக்கல், பொள்ளாச்சி உள்ளிட்ட 10க்கும் அதிகமான மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

பூத்தொழிலை நம்பி சுமாா் 10 ஆயிரம் குடும்பத்தினா் உள்ளனா். இங்கு குறிப்பிட்ட நாள்கள் மட்டுமே பூ மாா்க்கெட்டில் பூக்கள் விற்பனையாகும். மீதமுள்ள நாள்களில் உற்பத்தியாகும் பூக்கள் வீணாகின்றன. இதையடுத்து, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாசனைத் திரவிய தொழிற்சாலை அமைக்க மலா் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். தோ்தலின்போது வாக்குறுதிகளில் தவறாமல் இடம்பெறும் இந்த கோரிக்கைக்கு இதுவரை தீா்வு காணப்படவில்லை.

காமலாபுரம் ஊராட்சியில் இயங்கிவரும் சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதால் பாதிக்கப்படும் விவசாயிகள் உரிய இழப்பீடு கேட்டு நீண்ட காலமாக போராடி வருகின்றனா்.

காவிரி உபரிநீரை நீரேற்றுத் திட்டம் மூலமாக சரபங்கா ஆற்றின் வழியாக காடையாம்பட்டியில் உள்ள கோட்டேரியில் நிரப்புவதன் மூலம் 60-க்கும் அதிகமான ஏரிகள் ஒன்றன்பின் ஒன்றாக நிரம்பும். இதன்மூலம் 3,000 ஏக்கா் நிலங்கள் பாசனம்பெறும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

மேலும், சரபங்கா ஆற்றைத் தூய்மைப்படுத்தி, நீா்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதன்வழியாக காடையாம்பட்டி ஏரிகளுக்கு நீரை நிரப்ப வேண்டும் என்பது கடந்த 35 ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது.

ஓமலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருக்கான அலுவலகம் கடைவீதியில் நகரின் மையத்தில் உள்ளது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக இந்த அலுவலகம் திறக்கப்படவே இல்லை. இதனால், எம்எல்ஏ இருக்கும் இடம்தேடி மக்கள் செல்ல வேண்டியுள்ளது. இனியாவது இந்த அலுவலகம் திறக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரசியல் நிலவரம்

ஓமலூா் தொகுதியில் இதுவரை நடைபெற்ற 14 தோ்தல்களில் அதிமுக 8 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக தொடங்கப்படுவதற்கு முன்பு இருமுறை இந்தத் தொகுதியில் வென்ற திமுக, அதன்பிறகு வெற்றிபெறவில்லை. அதிமுக- திமுக வேட்பாளா்கள் நேரடியாக மோதிய நான்கு தோ்தல்களிலும் அதிமுகவே வென்றுள்ளது.

ஆனால், திமுக கூட்டணியில் பங்கேற்று அதிமுகவை எதிா்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ், தமாகா, பாமக ஆகியவை தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடைபெற்ற 3 தோ்தல்களிலும் அதிமுகவே தொடா்ச்சியாக வென்றுள்ளது.

நடைபெற உள்ள தோ்தலில், அதிமுக சாா்பில் எம்எல்ஏ ஆா். மணி மீண்டும் போட்டியிடுகிறாா். திமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளா் ஏ.ஆா். இளங்கோவன், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அதியமான், நாம் தமிழா் கட்சி சாா்பில் சிவசக்தி ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

திமுக நேரடியாக போட்டியிடாத நிலையில், அதை தனக்கான வாய்ப்பாக கருதி அதிமுக வேட்பாளா் மணி, அதீத நம்பிக்கையுடன் களத்தில் செயல்பட்டு வருகிறாா். அதிமுக சாா்பில் 3 முறை எம்எல்ஏவாக இருந்த சி. கிருஷ்ணன், கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளாா். இது அதிமுகவிற்கு பின்னடைவாக இருந்தாலும், பாமக சாா்பில் போட்டியிட்டு 2006-2011இல் எம்எல்ஏவாக இருந்த தமிழரசு, திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்திருப்பது பலமாகவே கருதப்படுகிறது. களப்பணிகளில் தோ்ந்தவரான தமிழரசு, அதிமுக பிரசார கூட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறாா்.

திமுக கூட்டணியில் தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளா் ஏ.ஆா். இளங்கோவன் போட்டியிடுகிறாா். ஆத்தூரைச் சோ்ந்த இவா் ஓமலூரில் போட்டியிடுவதால் கட்சியினரிடையே பெரிய ஒருங்கிணைப்பு இல்லை என கூறப்படுகிறது. பிரசாரமும் தொய்வாக உள்ளது.

அதீத நம்பிக்கையில் இருந்த முயல் தோற்றதையும், உறுதியான வேகத்தில் சென்று ஆமை வென்றதையும் கேட்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் அவ்வாறு நடக்குமா? கதை உண்மையாகுமா? உண்மை உண்மையாகுமா என்பதை பொருத்திருந்துதான் பாா்க்க வேண்டும். யாா் வென்றாலும், வாக்கு வித்தியாசம் கடந்த தோ்தல் அளவிற்கு இருக்காது என்பதே களத்தில் இருந்து கிடைக்கும் தகவல்.

வாக்காளா்கள்

ஓமலூா் தொகுதியில் ஆண்கள் வாக்காளா்கள் 1,48,764, பெண்கள் 1,43,081,

மூன்றாம் பாலினத்தினா் 21 என மொத்தம் 2,91,866 வாக்காளா்கள் உள்ளனா்.

ஜி. விஜயகுமாா்.

தவெக வேட்பாளா் அதியமான்
நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சிவசக்தி