தமிழகத்துக்கு 4 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியது: மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணி தீவிரம்
தமிழகத்துக்கு 4 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதையடுத்து, மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
தமிழகத்துக்கு 4 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதையடுத்து, மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு 5 ஆயிரம் மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய 2 தடுப்பூசிகளை அனைத்து மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பி வருகிறது.
தமிழகத்தில் தடுப்பூசிகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதால், உடனடியாக 15 லட்சம் டோஸ் கோவிஷீல்ட், 5 லட்சம் டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசிகளை அனுப்புமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு அண்மையில் கோரியது.
முதலில் 1 லட்சம் டோஸ் கோவேக்ஸின், அடுத்ததாக 6 லட்சம் டோஸ் கோவிஷீல்ட், கடந்த வெள்ளிக்கிழமை 2 லட்சம் டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன.
இந்நிலையில் சனிக்கிழமை ஹைதராபாதில் இருந்து 2 லட்சம் டோஸ் கோவேக்ஸின் மற்றும் புணேவில் இருந்து 2 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியது. தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் வைத்து, மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்துக்கு இதுவரை மொத்தம் 57 லட்சம் டோஸ் கோவிஷீல்ட், 12.82 லட்சம் கோவேக்ஸின் என மொத்தம் 69.82 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதில், 52 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.