எனது தாய்வீட்டுக்கு வந்திருப்பதுபோல உணர்கிறேன்: ராகுல் காந்தி காஷ்மீர் பயணம்
ஜம்மு- காஷ்மீருக்கு நான் வந்திருப்பதை எனது தாய் வீட்டுக்கு வந்திருப்பதுபோல உணர்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பேசினார்.
ஜம்மு- காஷ்மீருக்கு நான் வந்திருப்பதை எனது தாய் வீட்டுக்கு வந்திருப்பதுபோல உணர்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பேசினார்.
இரண்டு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீருக்கு திங்கள்கிழமை மாலை வந்த ராகுல் காந்தி, அக்கட்சியின் மாநிலத் தலைவர் குலாம் அகமது மீரின் மகன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள கீர் பவானி கோயில் என்று அறியப்படும் ராஜ்ஞா தேவி கோயிலுக்குச் சென்றார். கீர் பவானி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், பின்பு மீர் பாபா ஹைதர் தலத்துக்கும், ஹஸ்ரத்பாலில் உள்ள புனிதத் தலத்துக்கும் சென்று தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் ஸ்ரீநகரில், காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:
எனது குடும்பத்தினர் தில்லியில் வசிக்கின்றனர். அதற்கு முன்னர் எனது குடும்பம் அலாகாபாதில் வசித்தது. அதற்கும் முன்பு நாங்கள் காஷ்மீரில்தான் வாசித்தோம். உங்களை என்னால் புரிந்து கொள்ள முடியும். காஷ்மீர் கலாசாரம், சிந்தனைகள் என்னிடமும் இருக்கின்றன. இங்கே நான் வந்தபோது எனது தாய்வீட்டுக்கு வந்திருப்பதாகவே உணர்கிறேன்.
பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய அவசியம் உடனடியாக ஏற்பட்டுள்ளது. ஜனநாயக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்.
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் பல விஷயங்களைப் பேச நான் விரும்பினேன். ஆனால், ஆளும் கட்சியினர் என்னைப் பேச அனுமதிக்கவில்லை.
ஜம்மு- காஷ்மீர், மக்களவைத் தொகுதிகள் அதிகம் இல்லாத இடமாக இருக்கலாம். தற்போது அது ஒரு மாநிலமாகக் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால், உங்கள் வாழ்வு முறையில் ஜம்மு காஷ்மீர் வலிமை பெற்றிருக்கிறது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது நாட்டை ஒன்றுபடுத்த முயற்சி செய்தோம். ஆனால், பாஜகவோ பிரிவினைவாத சித்தாந்தத்தின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கிறது என்றார்.
குலாம் நபி ஆசாத் வேண்டுகோள்: முன்னதாக இக் கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் பேசியதாவது:
ஜம்மு-காஷ்மீரை மறுகட்டமைக்கவும் நிலம், வேலைவாய்ப்பு உரிமையைப் பாதுகாக்கவும் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஜம்மு- காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ராகுல் காந்தி கேள்வி எழுப்ப வேண்டும்.
2019, ஆக. 5-இல் இந்த மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்த சம்பவம் ஜம்மு-காஷ்மீர் மக்களின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதலாகும்.
இதுபோன்ற சம்பவம் இதற்குமுன் இந்தியாவில் நடைபெற்றதில்லை. கடந்த ஜூன் மாதத்தில் அனைத்துக் கட்சியினருடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸால் தெரிவிக்கப்பட்ட பேரவைத் தேர்தலை நடத்த வேண்டுவது உள்ளிட்ட 5 முக்கிய விஷயங்களை நிறைவேற்றித் தருவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். அதை அவர் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
மோடிக்கு எதிரான போராட்டம் தொடரும்: முன்னதாக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவைப் பிளவுபடுத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் சித்தாந்தத்துக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்னைகளான வேளாண்மை சட்டங்கள், பெகாஸஸ் உளவு விவகாரம், ரஃபேல் வழக்கு, ஊழல் குற்றச்சாட்டுகள், வேலைவாய்ப்புத் திண்டாட்டம் பற்றிப் பேச எங்களை அரசு அனுமதிப்பதில்லை.
ஜம்மு- காஷ்மீர் மட்டுமின்றி தமிழகம், மேற்கு வங்க மாநிலங்கள் மீதும் பாஜக பாரபட்சத்துடன் நடந்து கொள்கின்றது. இதுபற்றி பேச ஊடகங்களை அனுமதிப்பதில்லை. பிற மாநிலங்கள் மீது பாஜக காட்டும் வெறுப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் எதிராக நாங்கள் போராட்டத்தை நடத்தி வருகிறோம் என்றார்.