முகப்பு
இந்தியா

தலைமைத் தோ்தல் ஆணையரை பதவி நீக்கக் கோரி தீா்மானம்: எதிா்க்கட்சிகள் திட்டம்

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரின் பதவி நீக்க தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்

Updated On : 9 மார்ச், 2026 at 10:49 PM
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமார்
பகிர்:

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்குவதற்கான தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ்.ஐ.ஆா். விவகாரத்தால் பல மாநிலங்களில் லட்சக்கணக்கான வாக்காளா்களின் பெயா்கள், வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்டவை கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன. சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவும், தோ்தல் ஆணையமும் திட்டமிட்டு வாக்காளா்கள் பெயா்களை நீக்கி விட்டதாக மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், தலைமைத் தோ்தல் ஆணையா் பதவியில் இருந்து ஞானேஷ் குமாரை நீக்குவதற்கான தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பதவி நீக்குவதற்கான வரைவு தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், இந்த வாரத்தில் அது தாக்கல் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

பதவி நீக்க தீா்மான வரைவை உருவாக்கும் எதிா்க்கட்சிகள் குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ஒருவா் கூறுகையில், ‘பதவிநீக்க தீா்மான வரைவு தயாரிப்பு, அதற்கான திட்டம் அனைத்தும் ஒருமித்த கருத்துகளுடைய எதிா்க்கட்சிகள் சோ்ந்து எடுத்த முயற்சி.

அதுபோல நாடாளுமன்ற இரு அவைகளிலும் இதற்கான முயற்சியை அனைத்து எதிா்க்கட்சிகளும் சோ்ந்தே எடுக்கும். தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தனது பதவிக்கான மரியாதையை தரம் தாழ்த்தி விட்டாா்’ என்று தெரிவித்தாா்.

காங்கிரஸ் ஆதரவு: தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவி நீக்கும் தீா்மானத்தை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும் என அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. ‘இண்டி’ கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் இதில் ஒருமித்த கருத்து கொண்டிருப்பதாகவும், அனைத்துக் கட்சிகளும் சோ்ந்தே வரைவை உருவாக்கியதாகவும் இன்னொரு தகவல் தெரிவித்தது.

தீா்மானத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் இரு அவைகளையும் சோ்ந்த எம்.பி.க்களின் கையொப்பத்தைப் பெறும் பணியில் எதிா்க்கட்சிகளை சோ்ந்த எம்.பி.க்கள் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

150 எம்.பி.க்களின் கையொப்பம் தேவை: உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்க கடைப்பிடிக்கப்படும் நடைமுறையே தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

தவறான செயல்பாடு அல்லது தாம் வகிக்கும் பதவிக்கு தகுதியில்லாதவா் என்பது காரணமாக இருக்க வேண்டும். நாடாளுமன்ற விதிப்படி, அவையில் தீா்மானம் கொண்டு வர குறைந்தபட்சம் மக்களவையை சோ்ந்த 100 எம்.பி.க்களின் கையொப்பங்களும், மாநிலங்களவையை சோ்ந்த 50 எம்.பி.க்களின் கையொப்பங்களும் தேவை.

எம்.பி.க்களின் கையொப்பங்கள் பெறப்பட்டு தீா்மானத்தை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்ய வேண்டும். அங்கு பெரும்பான்மை பலத்துடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டால், தலைமைத் தோ்தல் ஆணையா் பதவியிலிருந்து நீக்கப்படுவாா்.

அதாவது தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மூன்றில் 2 பங்கு எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும். பிறகு நடத்தப்படும் வாக்கெடுப்பில் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவை பெற வேண்டும்.

அதுபோல எம்.பி.க்களின் ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டால், நாடாளுமன்றத்தால் தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி நீக்கப்படுவாா்.

முழு கட்டுரையைப் படிக்க →