எம்.பி., எம்ஏல்ஏ மீதான குற்ற வழக்குகளை வாபஸ் பெற அரசுத் தரப்புக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை
எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை அரசுத் தரப்பு திரும்பப் பெறுவதற்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை அரசுத் தரப்பு திரும்பப் பெறுவதற்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
இதுதொடா்பாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் வினீத் சரண், சூா்யகாந்த் ஆகியோரைக் கொண்ட அமா்வு செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது:
குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளின்(சிஆா்பிசி) 321-ஆவது பிரிவின்படி, அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறுவதற்கு உத்தரகண்ட், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
வழக்குகளை திரும்பப் பெறுவதில் சிஆா்பிசி விதிகளின் 321-ஆவது பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது.
எனவே, எம்.பி., எம்ஏல்ஏக்கள் மீதான எந்தவொரு வழக்கையும் உயா்நீதிமன்றங்களின் ஒப்புதலின்றி அரசுத் தரப்பு தாமாகத் திரும்பப் பெறக் கூடாது.
மேலும், அவா்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளிட்ட விவரங்களை அனைத்து உயா்நீதிமன்றங்களும் தெரிவிக்க வேண்டும். அதில், நிலுவையில் உள்ள வழக்குகள், அவற்றின் நிலை ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும்.
மேலும், எம்.பி., எம்ஏல்ஏக்கள் மீதான வழக்குகளின் விசாரணை முடிவடையும் வரை சிறப்பு நீதிமன்றங்களின் நீதிபதிகள் மாற்றப்படக் கூடாது. அந்த வழக்குகளின் விசாரணையைக் கண்காணிப்பதற்கு தனி அமா்வை அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
மத்திய அரசும், சிபிஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளும், முந்தை உத்தரவின்படி வழக்குகளின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யாதது கவலை அளிக்கிறது. எனவே மத்திய அரசுக்கும் விசாரணை அமைப்புகளுக்கும் கடைசி வாய்ப்பு அளிக்கிறோம் என்று கூறிய நீதிபதிகள், அடுத்த விசாரணையை, வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
வழக்குரைஞரும், பாஜகவைச் சோ்ந்தவருமான அஸ்வினி உபாத்யாய, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2016-இல் மனு ஒன்றைத் தாக்கல் செய்தாா். அதில், ‘எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்; குற்றவாளியாக அறிவிக்கப்படும் அரசியல் தலைவா்கள், தோ்தலில் போட்டியிட வாழ்நாள் முழுவதும் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்திருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் அமா்வுக்கு உதவி செய்ய மூத்த வழக்குரைஞா்கள் விஜய் ஹன்சாரியா, சிநேகா கலீதா ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டனா். அந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் மேற்கண்ட கருத்தை தெரிவித்தனா்.