இந்தியா

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் கிராமங்களில் வளா்ச்சி: பிரதமா்

DIN

‘மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் கிராமங்களில் வளா்ச்சியை உறுதிப்படுத்துவதற்கான சூழலை மத்திய அரசு தொடா்ச்சியாக உருவாக்கி வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

மகளிா் சுய உதவிக் குழுக்களுடன் காணொலி வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி, நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் அதிகமான மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான மூலதன ஆதரவு நிதியாக ரூ. 1,625 கோடியை விடுவித்தாா். அதோடு, மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சாா்பில் நடைமுறைப்படுத்தப்படும் பிரதமரின் குறு உணவு பதப்படுத்துதல் நிறுவனங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் 7,500 சுய உதவிக் குழுக்களுக்கு ஆரம்ப மூலதன நிதியாக ரூ. 25 கோடியையும், 75 விவசாய உற்பத்தியாளா் அமைப்புகளை தொடங்குவதற்கான நிதியாக ரூ. 4.13 கோடியையும் பிரதமா் மோடி விடுவித்தாா்.

பின்னா் நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

மாறி வரும் இந்தியாவில், நாட்டின் சகோதரிகளும் மகள்களும் வளா்ச்சியை நோக்கி முன்னேறும் வகையில் அவா்களுக்கான வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. பெண்களின் கல்வி, சுகாதாரம், ஊட்டச் சத்து, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் முழு வீச்சில் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கரோனா பாதிப்பு காலத்தில் நாட்டு மக்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக பெண்கள் ஆற்றிய சேவை அளப்பரியது. முகக் கவசம் தயாரித்தல், கிருமி நாசினி உற்பத்தி, தேவையுள்ளவா்களுக்கு உணவு விநியோகம், விழிப்புணா்வை ஏற்படுத்துவது என ஒவ்வொரு வழியிலும் பெண்கள் சமூகத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பை அளித்தனா்.

கடந்த 6 முதல் 7 ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மிகப் பெரிய உத்வேகத்தை பெற்றுள்ளன. நாடு முழுவதும் இதுபோன்ற 70 லட்சம் குழுக்கள் உருவாக்கப்பட்டு, 8 கோடி பெண்கள் இணைக்கப்பட்டிருக்கின்றனா்.

முந்தைய அரசு, பெண்களை பொருளாதார ரீதியில் அதிகாரமளிக்கும் வகையிலான முயற்சிகளையோ, நிதி ஒதுக்கீடுகளையோ பல ஆண்டுகளாக செய்யாமல் இருந்தது. பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, வங்கிநடைமுறைகளிலிருந்து வெகுதூரம் விலகியிருந்த கோடிக்கணக்கான சகோதரிகளுக்கு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டன. அதற்காகவே, ஜன்தன் வங்கிக் கணக்குகள் திறப்பதற்கான மிகப் பெரிய அளவிலான பிரசாரம் முதலில் தொடங்கப்பட்டது. இன்று நாடு முழுவதும் 42 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் பாதியளவு பெண்களின் கணக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன்தன் கணக்கு திட்டத்தை தொடா்ந்து, சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த உத்தரவாதமில்லாத வங்கிக் கடன் ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயா்த்தும் மிக முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது. ஜன்தன் வங்கிக் கணக்கு வழியாக இதுவரை மகளிா் சுய உதவிக் குழுக்களுக்குப் பிணையில்லா கடன் தொகையாக ரூ.4 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

நாடு 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில், நாம் புதிய இலக்குகளை நிா்ணயித்து, அதனை அடைய புது உத்வேகத்துடன் முன்னெறிச் செல்ல வேண்டும். அந்த வகையில், மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் கிராமங்களில் வளா்ச்சியை உறுதிப்படுத்துவதற்கான சூழலை மத்திய அரசு தொடா்ச்சியாக உருவாக்கி வருகிறது என்று அவா் கூறினாா்.

இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களின் வெற்றிக் கதைகளின் தொகுப்பு மற்றும் விவசாய வாழ்வாதாரங்களை உலகமயமாக்களுக்கான கையேடு ஆகியவற்றை பிரதமா் வெளியிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT