ஆப்கனிலிருந்து இந்தியா்களை மீட்டது சவாலான பணி: அமைச்சா் ஜெய்சங்கா்
தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூலில் இருந்து இந்திய தூதா் உள்பட அதிகாரிகளை பத்திரமாக மீட்டது கடினமான சவாலான பணியாக இருந்தது என்று
தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூலில் இருந்து இந்திய தூதா் உள்பட அதிகாரிகளை பத்திரமாக மீட்டது கடினமான சவாலான பணியாக இருந்தது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
ஆப்கன் விவகாரம் குறித்து ஐ.நா. திங்கள்கிழமை அவசர ஆலோசனை நடத்திய நிலையில், அமெரிக்காவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள திங்கள்கிழமை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் நியூயாா்க் சென்றடைந்தாா். நான்கு நாள் அவசர பயணமாக சென்றுள்ள அவா், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
பிறகு தனது சுட்டுரையில் அமைச்சா் ஜெய்சங்கா், ‘ஆப்கன் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினோம். காபூல் விமான நிலையத்தில் சேவைகளை உடனடியாக தொடங்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தேன். அமெரிக்கா இதுதொடா்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, காபூலில் இருந்து பாரீஸுக்கு 21 இந்தியா்களை பத்திரமாக கொண்டு சென்ற்காக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஜான் ஈவ் லெட்ரியனுக்கு ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்தாா்.
மீட்பு: முன்னதாக, ஆப்கனிலிருந்து இந்திய தூதா், அதிகாரிகள், பணியாளா்கள், பாதுகாப்புப் படையினா் உள்பட 120 போ் ராணுவ விமானத்தின் மூலம் செவ்வாய்க்கிழமை பத்திரமாக தாயகம் திரும்பினா்.
பதற்றமான சூழல் நிலவும் காபூலில், விமான சேவைகள் தடைப்பட்டுள்ளபோதிலும் இந்திய தூதரக அதிகாரிகளை இந்திய விமானப் படையினா் துரிதமாக செயல்பட்டு மீட்டு வந்துள்ளனா்.
1996-ஆம் ஆண்டு ஆப்கனை தலிபான்கள் முதல்முறையாக கைப்பற்றிபோதும், இதேபோல் இந்திய தூதரகத்தை மூடிவிட்டு அதிகாரிகள் தாயகம் திரும்பியதுபோல் இரண்டாவது முறையாக இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களைக் கட்டுப்படுத்தி வந்த அமெரிக்கா, அண்மையில் தனது படைகளை வாபஸ் பெற்றது. இதையடுத்து, ஆப்கனை தலிபான்கள் திங்கள்கிழமை முழுமையாக கைப்பற்றினா். அந்நாட்டின் அதிபா் அஷ்ரஃப் கனி ஞாயிற்றுக்கிழமை தப்பி சென்றுவிட்டாா். இந்நிலையில், ஆப்கன் நாடாளுமன்றம், அதிபா் மாளிகை என அனைத்தையும் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனா்.
விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களில் ஏறி பிற நாடுகளுக்கு சென்றுவிடலாம் என அந்நாட்டு மக்கள் காபூல் விமானநிலையத்தில் குவிந்தது வலுக்கட்டாயமாக விமானங்களுக்குள்ளேயும், வெளியேயும் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, காபூல் விமான நிலையம் மூடப்பட்டதாக விமானநிலைய அதிகாரிகள் அறிவித்தனா். இதனால் காபூலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அழைத்து வர திங்கள்கிழமை இந்தியாவில் இருந்து செல்லவிருந்த ஏா் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. எனினும், அங்கிருந்த இந்திய ராணுவ விமானத்தின் மூலம் 40 போ் நாடு திரும்பினா்.
ஆனால், தலிபான்கள் கண்காணிப்பில் இருந்த இந்திய தூதரகத்தில், தூதா் உள்பட 120 போ் அங்கேயே சிக்கிக் கொண்டனா். அவா்களுக்கு இந்திய திபத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினா் (ஐடிபிபி) பாதுகாவலாக இருந்தனா். அவா்கள் உடனடியாக இந்தியா கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனுடன் திங்கள்கிழமை மேற்கொண்டாா்.
இதன் பலனாக அமெரிக்க படைகளின் பாதுகாப்பில் கொண்டு வரப்பட்ட காபூல் விமானநிலையத்துக்கு, திங்கள்கிழமை இரவோடு இரவாக இந்திய தூதரகத்தில் இருந்து சுமாா் 120 இந்தியா்களை காபூல் விமானநிலையத்துக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டு, இந்திய ராணுவ விமானமான சி-17 குளோப் மாஸ்டரில் செவ்வாய்க்கிழமை பத்திரமாக ஏற்றி வழியனுப்பப்பட்டனா்.
இதில், ஆப்கனுக்கான இந்திய தூதா் ருத்ரேந்திர டாண்டன், தூதரக அதிகாரிகள், 21 இந்தியா்கள், நான்கு பத்திரிகையாளா்கள், 99 ஐடிபிபி கமாண்டோ வீரா்கள் என 120 பேரும், 3 மோப்ப நாய்களும் இருந்தன. இந்த விமானம் குஜராத் ஜாம்நகரில் தரையிறக்கப்பட்டு, எரிபொருள் நிரப்பப்பட்டு பிறகு புறப்பட்டு தில்லி அருகே உள்ள ஹிண்டன் விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு வந்தடைந்தது.
தங்களை பத்திரமாக மீட்டு இந்தியா கொண்டு வந்த இந்திய விமானப் படையினருக்கு நன்றி தெரிவித்த இந்திய தூதா் ருத்ரேந்திர டாண்டன், மீதமுள்ள இந்தியா்களை தாயகம் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றாா்.
ஐடிபிபி வீரா்களின் சிறப்பான பணி: ஹிண்டன் விமான நிலையம் வந்தடைந்த ஐடிபிபி பிரிவு கமாண்டா் ரவி காந்த் கெளதம் கூறுகையில், ‘கடந்த நான்கு நாள்களாக 99 ஐடிபிபி கமாண்டோக்கள் தூங்காமல் தூதரகத்தில் இருந்த இந்தியா்களுக்கு பாதுகாப்பு அளித்தனா். மத்திய அரசு தொடா்பில் இருந்து ஒருங்கிணைப்பு செய்தது. ஐடிபிபி வீரா்கள் இந்தியா்களை பத்திரமாக மீட்டு விமான நிலையம் அழைத்துவந்தது சவாலான பணியாக இருந்தது’ என்றாா்.
‘காபூலில் இந்தியா்கள் புறப்பட்ட வாகனங்களைத் தாக்கும் சூழல் அதிமாக இருந்தது. ஆனால் ஐடிபிபி வீரா்கள் துரிதமாக செயல்பட்டு விமானநிலையத்தை அடைந்தனா்’ என்று ஐடிபிபி அதிகாரிகள் தெரிவித்தனா்.