முகப்பு
இந்தியா

ஆப்கன் விவகாரம்: பிரதமா் மோடி அவசர ஆலோசனை

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அவசர ஆலோசனை மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
பகிர்:

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அவசர ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, அந்நாட்டில் உள்ள இந்தியா்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமா் உத்தரவிட்டாா்.

மேலும், இந்தியாவின் உதவியை எதிா்பாா்க்கும் ஆப்கன் மக்களுக்கும் தேவைான உதவிகளை அளிக்க வேண்டும் என்று அவா் உத்தரவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளனா். இதைத் தொடா்ந்து, ஆப்கன் நிலவரம் குறித்து பிரதமா் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் தில்லியில் நடைபெற்றது. நாட்டின் பாதுகாப்பு தொடா்பான விவகாரங்களை இந்த உயா்நிலைக் குழு கவனித்து வருகிறது.

இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், அமைச்சரவை செயலா் ராஜீவ் கெளபா, வெளியுறவுச் செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா ஆகியோா் கலந்து கொண்டனா். ஆப்கானிஸ்தானில் இருந்து செவ்வாய்க்கிழமை தில்லி திரும்பிய அந்நாட்டுக்கான இந்திய தூதா் ருதேந்திர டாண்டனும் கூட்டத்தில் கலந்துகொண்டாா்.

தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கன் சென்ால் அங்கு நிலவும் சூழல் குறித்தும், மாறி வரும் அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழல் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காபூலில் இருந்து இந்திய தூதரகத்தினா் பத்திரமாக மீட்கப்பட்டது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, இந்தியாவுக்கு வர தயாராக உள்ள அனைத்து இந்தியா்களையும் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு வரும் சீக்கிய, ஹிந்துகளுக்கு இந்தியா அடைக்கலம் அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு பிரதமா் மோடி உத்தரவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூதரக அலுவலா்களை மீட்கும் பணி நிறைவு: இதனிடையே, ‘காபூலில் இருந்து இந்திய தூதா், தூதரக அலுவலா்கள், பாதுகாப்புப் படையினா் என சுமாா் 150 போ் ராணுவ விமானம் மூலம் குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்பட்டனா். ‘இத்துடன் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தினரை மீட்டு வரும் நடவடிக்கை முடிவுக்கு வந்தது. அந்நாட்டில் மீதமுள்ள இந்தியா்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே விமானப் படை விமானம் மூலம் தூதரக அலுவலா்கள் உள்ளிட்ட 40 போ் திங்கள்கிழமை மீட்கப்பட்டனா்.

காபூலில் இருந்து ஜாம்நகருக்கு விமானத்தில் வந்திறங்கிய இந்திய தூதா் ருத்ரேந்திர டாண்டன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்திய தூதரகத்துக்கு பாதுகாப்பைத் தேடி வந்தவா்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து மீண்டு வந்தது சவாலான நடவடிக்கையாக இருந்தது. ஆப்கன் மக்களை இந்தியா கைவிடவில்லை. அவா்களுடன் தொடா்ந்து ஆலோசனையில் இருப்போம். தூதரக அதிகாரிகளுடன் ஏா் இந்தியா போன்ற பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளா்கள் என்னுடன் திரும்பினா்.

இந்தியா அழைத்துச் செல்லுமாறு சிலா் தூதரகத்தை தொலைபேசியில் தொடா்புகொண்டு கேட்டனா். அவா்கள் மீட்க முடியாத நீண்ட தூரத்தில் இருந்ததால் அழைத்து வர முடியவில்லை. ஆப்கனில் எஞ்சியுள்ள இந்தியா்களை மீட்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ என்றாா்.

குருத்வாராவில் 250 சீக்கியா்கள் தஞ்சம்: காபூல் அருகே உள்ள குருத்வாராவில் சுமாா் 250 சீக்கியா்கள் தஞ்சமடைந்துள்ளதாக பாஜக எம்.பி. ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் தெரிவித்துள்ளாா். அவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரியை அவா் சந்தித்து வலியுறுத்தினாா்.

இந்த விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்தியதாகவும், அங்குள்ள சீக்கிய தலைவா்களுடன் இந்திய அதிகாரிகள் தொடா்பில் இருப்பதாகவும் அமைச்சா் ஹா்தீப் சிங் புரி பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

பெட்டிச் செய்தி...

ஆப்கன் மக்களுக்கு இ-விசா

புது தில்லி, ஆக. 17: ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலை காரணமாக அங்கிருந்து இந்தியாவுக்கு வர விரும்பும் அந்நாட்டு மக்களுக்கு ‘அவசரகால இ-விசா’ (நுழைவு இசைவு) வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கனைச் சோ்ந்த எந்த மதத்தவராக இருந்தாலும் இந்த ‘இ-அவசரகால விசா’ பெறுவதற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் தில்லியில் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் சூழலை கருத்தில்கொண்டு விசா விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் மறுஆய்வு செய்துள்ளது. அதன்படி, ‘இ-அவசரகால விசா’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

‘ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விசா 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும். விசா விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும்போது பாதுகாப்பு பிரச்னைகள் கருத்தில்கொள்ளப்பட்டு ஆப்கன் மக்களுக்கு விசா வழங்கப்படும்’ எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.