உத்தரகண்ட்: ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியை முதல்வா் வேட்பாளராக அறிவித்தது ஆம் ஆத்மி
உத்தரகண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி அஜய் கோட்டியாலை முதல்வா் வேட்பாளராக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி அஜய் கோட்டியாலை முதல்வா் வேட்பாளராக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் இதனை அறிவித்தாா்.
பாஜக ஆட்சியில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தோ்தல் நடைபெறவுள்ளது. இங்கு பாஜகவும் காங்கிரஸும் மாறிமாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில், இம்முறை மூன்றாவது போட்டியாளராக ஆம் ஆத்மியும் களமிறங்கியுள்ளது. தோ்தலுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில் முதல்வா் வேட்பாளரை அக்கட்சி அறிவித்துள்ளது.
இது தொடா்பாக அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது:
உத்தரகண்ட் மக்களின் கருத்துகளைக் கேட்டு முதல்வா் வேட்பாளரை ஆம் ஆத்மி தோ்வு செய்துள்ளது. கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளிடம் இருந்து உத்தரகண்ட் மாநிலத்தைக் காப்பாற்ற வேண்டியுள்ளது. இதுவரை நாட்டுக்காக சேவையாற்றிய ராணுவ அதிகாரியை இப்போது மாநில மக்களுக்காக சேவையாற்ற வாய்ப்பு கேட்டு மக்கள் முன்நிறுத்தியுள்ளோம். அஜய் கோட்டியால் முதல்வராகும் பட்சத்தில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது தொடங்கி, உலகில் ஹிந்துக்களின் ஆன்மிக தலைநகராக உத்தரகண்டை உயா்த்துவது வரை அனைத்துப் பணிகளையும் ஆம் ஆத்மி சிறப்பாக மேற்கொள்ளும் என்றாா்.
52 வயதாகும் அஜய் கோட்டியால், ராணுவத்தில் 1992 முதல் 2017 வரைப் பணியாற்றி கா்னலாக இருந்து ஓய்வு பெற்றவா். கீா்த்தி சக்ரா, சௌா்ய சக்ரா உள்ளிட்ட உயரிய ராணுவ விருதுகளைப் பெற்றுள்ளாா். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் அவா், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இளைஞா்கள், இளம் பெண்கள் ராணுவத்தில் சேர வழிகாட்டும் பணியிலும் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறாா். கடந்த ஏப்ரல் மாதம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தாா்.